இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்க, அமெரிக்கா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இது குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பேசிய நிலையில், தற்போது வெளியுறவுத்துறை செயலாளர் களத்தில் இறங்கியுள்ளார். பாகிஸ்தான் தலைவர்களுடன் பேசிய அவர், அதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கருடனும் பேசியுள்ளார்.

Continues below advertisement

இந்தியா - பாகிஸ்தான் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் நிலைகள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தியது. இதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதலை ஆரம்பித்தது. அதை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்து வருகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பாகிஸ்தானின் தாக்குதலால், இரு நாடுகளுக்கும் இடையே பேர் மூளும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறும் உலக நாடுகள், இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட வேண்டும் என விரும்புகின்றன.

Continues below advertisement

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க உதவலாமா என ஏற்கனவே சீனா, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை வைத்தன. ஆனால், பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில், இந்தியா அதற்கு செவிசாய்க்காமல் இருக்கிறது.

பாகிஸ்தானுடன் பேசிய மார்கோ ரூபியோ

போர் பதற்றத்தை தணிக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீருடன், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தொலைபேசி வாயிலாக பேசியுள்ளார். அப்போது, போர் பதற்றத்தை தணிக்கும் வழிவகைகளை ஆராய்ந்து, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறும், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை இந்தியாவுடன் தொடங்குவதற்கு, பாகிஸ்தானுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறியிருந்த நிலையில், தற்போது, வெளியுறவுச் செயலாளர் பேச்சுவார்த்தைக்கு உதவத் தயார் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரிடம் பேசிய மார்கோ ரூபியோ

இந்நிலையில், பாகிஸ்தானுடன் பேசிய பின்னர், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கரிடமும் மார்கோ ரூபியோ பேசியுள்ளார். அப்போது, தவறான கணக்கீடுகளை தவிர்க்கும் வகையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றத்தை தணிக்குமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

இரு நாடுகளும் பதற்றத்தை தணிக்கும் வழிகளை கண்டறியுமாறும், இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி தொடர்புகளை மீண்டும் நிறுவ வேண்டும் எனவும் ரூபியோ கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளும் போரை தவிர்க்கும் வகையில், ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா உதவத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெய்சங்கர் அளித்த பதில் என்ன.?

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ரூபியோவுடன் பேசியதாகவும், தகுந்த அளவீடுகளுடனும், பொறுப்புடனுமே இந்தியாவின் அணுகுமுறை இருப்பதாகவும், அது அப்படியே தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம், பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதில் இந்தியா தெளிவாக இருக்கிறது என்பது தெரிகிறது.