அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, போட்டியில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையேயான வித்தியாசம் 4 முதல் 5 விழுக்காடு என கூறப்பட்டுள்ளது.


அமெரிக்க அதிபர் தேர்தல்:


பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி, அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை மாதங்களே உள்ள நிலையில், அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத அளவுக்கு திருப்பங்கள் அரங்கேறியது.


தொடக்கத்தில் தற்போதைய அதிபர் ஜோ பைடனே, ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வயது முதிர்வு, நியாபக மறதி என பைடனுக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த புகார்கள் ஜனநாயக கட்சியினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.


இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் அதிபர் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் நிலைமையை தலைகீழாக திருப்பிப்போட்டது. டிரம்ப்க்கு ஆதரவாக சூழல் மாறியதால், அதிபர் போட்டியில் இருந்து பைடன் விலக வேண்டும் என ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் கோரிக்கை வைத்தனர்.


கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?


பைடன், டிரம்ப் ஆகியோருக்கு இடையே நடந்த விவாதத்தில் பைடன் பதில் அளிக்க முடியாமல் தடுமாறியது பைடனை மேலும் நெருக்கடியில் தள்ளியது. இப்படிப்பட்ட சூழலில், போட்டியிலிருந்து விலகுவதாகவும் துணை அதிபர் கமலா ஹாரிஸை அதிபர் போட்டிக்கு முன்மொழிவதாகவும் அறிவித்தார்.


இதையடுத்து, ஜனநாயக கட்சியினரின் ஏகோபித்த ஆதரவின் காரணமாக அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார். ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ட்ரம்ப் முன்னிலை வகித்து வந்த நிலையில், கமலா ஹாரிஸ் போட்டியில் குதித்த பிறகு, நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.


ஒரு கட்டத்தில் ட்ரம்பை பின்னுக்கு தள்ளி கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வந்தார். இப்படிப்பட்ட சூழலில்தான், ட்ரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையே விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில், ட்ரம்பை விட சிறிய வாக்கு வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் முன்னிலை வகித்து வருவது தெரிய வந்துள்ளது.


விவாதத்தின்போது பல கேள்விகளுக்கு கமலா ஹாரிஸ் சாமர்த்தியமாக பதில் அளித்திருந்தார். இது, முக்கிய செய்தி நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்புகளில் எதிரொலித்துள்ளது. கடந்த 11ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரையில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் 50 சதவிகித மக்கள் கமலா ஹாரிஸையும், 46 சதவிகித பேர் ட்ரம்பையும் ஆதரித்துள்ளனர்.