அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய எலான் மஸ்க்-க்கு டிரம்ப், தனது நன்றியை தெரிவித்துள்ளார். தனக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்த எலான் மஸ்கை நேசிப்பதாக வெற்றி உரையில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.


அமெரிக்க அதிபர் தேர்தல்:


முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியதாக கருதப்பட்டது. ஆனால், முடிவுகள் அறிவிக்க தொடங்கியதில் இருந்தே டிரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்தார். 


குறிப்பாக, வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன், அரிசோனா, நெவாடா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி உறுதியான உடனேயே, அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


எலான் மஸ்க்கிடம் எமோஷனலாக பேசிய டிரம்ப்:


இந்த நிலையில், தனது வெற்றி உரையில் உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-க்கு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். ஆதரவாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பேசிய டிரம்ப், "நமக்கு ஒரு புதிய நட்சத்திரம் கிடைத்துள்ளது. நட்சத்திரம் பிறந்துள்ளது. அது வேறு யாரும் அல்ல. எலான் (மஸ்க்) தான்.


அவர் ஒரு அற்புதமான நபர். இன்று இரவு ஒன்றாக அமர்ந்திருந்தோம். உங்களுக்குத் தெரியும். அவர் பிலடெல்பியாவில் இரண்டு வாரங்கள், பென்சில்வேனியாவின் வெவ்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். எலானால் மட்டுமே இதைச் செய்ய முடியும். அதனால்தான், உங்களை நேசிக்கிறேன் எலான். நமது நாடு இதுவரை கண்டிராத அரசியல் வெற்றி இது" என்றார்.


கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி, முதல்முறையாக குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரானார். தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனிடம், டிரம்ப் தோல்வியை தழுவினார். இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.


இதையும் படிக்க: US Election Results 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் - வெற்றி கொடிநாட்டிய இந்தியர்கள், யார்? எங்கு என தெரியுமா?