அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது குடும்பத்தின் புதிய உறுப்பினரான கமாண்டர் என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார். 


நாய்க்குட்டியுடன் தான் பந்து வீசி விளையாடும் படக்காட்சியையும், வாக்கிங் செல்லும் காட்சியையும் தனது ட்விட்டர் பகுதியில் அதிபர் பைடன் பதிவிட்டுள்ளார். 




அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாய்கள் மீது மிகவும் விருப்பம் கொண்ட நபர். அவர் சாம்ப், மேஜர் என்ற இரண்டு நாய்களை மிகவும் நேசித்து வளர்த்து வந்தார். அவர் அதிபராக பதவியேற்றபோது நாய்களையும் வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்து வைத்து வளர்த்து வந்தார். 


இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் சாம்ப் என்ற நாய் உயிரிழந்தது. இதனிடையே மேஜர் பல்வேறு நபர்களை கடிக்க தொடங்கியது. இதனால் அது பயிற்ச்சிக்காக டெலவர் மாகாணத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பயிற்சி முடிந்து வந்தபோதும் மேஜரின் குணம் மாறவில்லை. அதனால் மேஜர் நிரந்தரமாக நாய்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


 






இந்நிலையில் ஜோ பைடனின் சகோதரர் ஜேம்ஸ் பைடன் அவருக்கு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்க்குட்டி ஒன்றை பரிசளித்துள்ளார். அந்த நாய்க்குட்டிக்கு கமாண்டர் என பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்றை பதிவிட்ட ஜோ பைடன், கமாண்டரை வெள்ளை மாளிகைக்கு வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் ஒன்றாம் தேதி பிறந்த கமாண்டர் கடந்த திங்களன்று மதியம் வெள்ளை மாளிகைக்கு வருகை புரிந்தது. 


இதுகுறித்து பைடனின் செய்தித் தொடர்பாளர் மைக்கேல் லாரோசா கூறுகையில், "கமாண்டர் நாய்க்குட்டியை வெள்ளை மாளிகைக்கு கொண்டுவருவதற்கு முன்னதாக, நாய் பயிற்சியாளர்கள், விலங்கு நடத்தை நிபுணர்கள், கால்நடை மருத்துவர்களுடன் நன்கு கலந்தாலோசிக்கப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்ட பின்னரே இங்கு கொண்டுவரப்பட்டது. அதேபோல், நாய் பயிற்சியாளர்கள், விலங்கு நடத்தை நிபுணர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, மேஜர் அதன் குடும்ப நண்பர்களுடன் அமைதியான சூழலில் வாழ்வது பாதுகாப்பானது என்ற நிபுணர்களின் கூட்டுப் பரிந்துரையைப் பின்பற்ற முடிவு செய்யப்பட்டது" எனத் தெரிவித்தார்.


இதனிடையே ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு விருப்பமான பூனைக்குட்டி ஒன்று அடுத்த மாதம் வெள்ளை மாளிகைக்கு வர உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தேர்தலில் வெற்றி பெற்றபோது வெள்ளை மாளிகைக்கு பூனைக்குட்டி ஒன்றை எடுத்துவருவதாக அவரது மனைவி தெரிவித்திருந்தார். அந்த வகையில் வரும் ஜனவரி மாதம் பூனைக்குட்டி வர உள்ளது.