என்னது லைஃப் முழுமைக்கும் லாட்டரியா என்று கேட்காதீர்கள்? ஆமாங்க இதுதாங்க உண்மையான லக்கி ப்ரைஸ். அமெரிக்காவில் ஒரு நபருக்கு இந்த லாட்டரி அடித்துள்ளது. அவர் வாழ்நாள் முழுவதற்கும் ஆண்டுக்கு ரூ.25,000 டாலர் அவருக்கு வழங்கப்படும். லைஃப் இன்சூரன்ஸ் தான் நாமெல்லாம் கேட்டிருப்போம் ஆனால் இந்த லக்கி ஃபார் லைஃப் லாட்டரி படு ஜோர் மேட்டராக இருக்கிறது என்று சிலாகிக்கிறார்கள் இணையவாசிகள்.
சரி விஷயத்துக்கு வருவோம். லக்கி ஃபார் லைஃப் என்றொரு அதிர்ஷ்டப் போட்டி அமெரிக்காவில் உண்டு. இதில் பல மாதங்களாக ஒரே நம்பர்களுடன் விளையாடினார் மிச்சிகனைச் சேர்ந்த நபர். கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பதுபோல் அந்த நபருக்கு ஆண்டுக்கு 25,000 டாலர் என்ற வாழ்நாள் முழுமைக்குமான லக்கி ஃபார் லைஃப் லாட்டரி அடித்துள்ளது.
அந்த நபரின் பெயர் ஸ்காட் சிண்டர். அவருக்கு 55 வயதாகிறது. அவர் ஒரு கேஸ் நிரப்பும் மையத்தில் தான் இந்த விளையாட்டை விளையாண்டிருக்கிறார். ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவர் இந்த விளையாட்டை விளையாடினார் அப்போது அவருக்கு 07-12-31-37-44 என்ற அதிர்ஷ்ட எண்கள் பொருந்திப் போயின.
இது குறித்து சிண்டர் கூறுகையில் நான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த விளையாட்டை இதே நம்பர்களுடன் விளையாடி வருகிறேன். அப்படி ஒரு கேஸ் ஸ்டேஷனில் ஆகஸ்ட் 7ல் விளையாடிய போதுதான் எனக்கு லக்கி ஃபார் லைஃப் லாட்டரி அடித்தது என்று உற்சாகமாகக் கூறுகிறார்.
முடிவை மாற்றிய சிண்டர்:
சிண்டருக்கு அடித்திருப்பது என்னவோ லக்கி ஃபார் லைஃப் லாட்டரி. அதாவது அவருக்கு 20 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 25,000 டாலர் வீதம் மொத்த 3 லட்சத்து 90 ஆயிரம் டாலர் வழங்கப்படும். ஆனால் அந்த மாதிரியாக அல்லாமல் ஒரே பேமென்ட்டில் 3 லட்சத்து 90 ஆயிரம் டாலரை கொடுத்துவிடுமாறு வேண்டியுள்ளார் சிண்டர். காரணம் அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு வீடு வாங்குவதே அவரது கனவாம். அட இந்த சொந்த வீடு கனவு நம்மூரில் மட்டும் என்று நினைத்துவிடக் கூடாது போலும்!
மெகா மில்லியன் லாட்டரி விளையாட்டு:
அமெரிக்காவின் பிரபலமான லாட்டரி விளையாட்டுகளில் உலகளவில் பிரசித்தி பெற்றது இந்த மெகா மில்லியன் லாட்டரி விளையாட்டுகள். இதை அமெரிக்காவில் இருப்பவர்கள் தான் விளையாட வேண்டுமென்பதில்லை. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆன்லைன் சேவைகள் இருப்பதால் உலகளவில் அதிகளவில் விளையாடப்படும் ஆன்லைன் லாட்டரி விளையாட்டுகளில் இந்த மெகா மில்லியன் லாட்டரி பிரபலமாக இருக்கிறது.
இருந்தாலும் உள்நாட்டில் அண்மைக்காலமாக லக்கி ஃபார் லைஃப் லாட்டரிக்கு மவுசு கூடியுள்ளதாம்.