அமெரிக்க ஓஹியோவில் தனது வீட்டில் யாரோ ஊடுருவதாக தவறாக நினைத்துக் கொண்டு தனது சொந்த 16 வயது மகளை சுட்டுக் கொன்றுள்ளார். இதனால் உள்ளூர் போலீசார் முன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இரு தினங்களுக்கு முன் நிகழந்த இச்சம்பவத்தால் அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் நீண்ட பட்டியலில் இந்த 16 வயது சிறுமி ஜானே ஹேர்ஸ்டனின் மரணமும் சேர்ந்தது.
இந்த சம்பவத்தை கண்ட சிறுமியின் தாயார், புதன் கிழமை காலை 4:30 மணியளவில் அவசர சேவைக்கு தொடர்புக் கொண்டு தனது மகளை திருடன் என தவறாகக் கருதி தன் கணவர் சுட்டுக் கொன்று விட்டதாக, போலீசில் புகார் தெரிவித்தனர். உடனடியாக சம்பவம் இடத்திற்கு வந்த அவசர உதவியாளர்கள் சில நிமிடங்களில் சிறுமி ஹேர்ஸ்டனை உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் காலை 5:42 மணி அளவில் உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
"இந்த இழப்பு மிக துயரமானது, இதனை நாங்கள் வருந்துகிறோம். பள்ளி மாணவர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம்" என்று உள்ளூர் பத்திரிகைகளால் வெளியிடப்பட்ட ஹேர்ஸ்டனின் பள்ளி வருத்தம் தெரிவித்துள்ளது.
சிறுமி கொல்லப்பட்ட பகுதிக்கு அருகில் தான் 6, 9 மற்றும் 22 வயதுடைய மூன்று பேர் டிசம்பர் 7ஆம் தேதி அன்று கொல்லப்பட்டனர். 2021 கொலம்பஸ் டிஸ்பாட்ச் பகுதி வரலாற்றில் துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைகள் கொண்ட மிகக் கொடிய பகுதியாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்திலிருந்து துப்பாக்கி வன்முறை அமெரிக்காவில் கடுமையாக அதிகரித்துள்ளது. அங்கு துப்பாக்கி உரிமைகள் பெரும் பரபரப்பாக விவாதிக்கப்படும் பிரச்சினைகளுள் ஒன்று. ஆனால் பெரும்பாலும் அரசியலமைப்பால் அவை அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன.
இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துப்பாக்கிச்சூடு சம்பவங்களைக் கட்டுப்படுத்த பல்வேறு நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ஆனாலும், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகத்தின் படி, அமெரிக்காவில் 2021ஆம் ஆண்டு 44,000 க்கும் அதிகமானோர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டுள்ளனர். தற்கொலைகள் உட்பட அவர்களில் 1,517 பேர் சிறுவர்கள் ஆகும்.
அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழ்த்தப்படும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பொதுமக்களிடையேயும் வெளிநாட்டவர்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கத்து.