Brown University Gun Fire: அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், காயமடைந்த 8 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

Continues below advertisement

கல்லூரியில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவின் ரோட் தீவில் உள்ள ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் கருப்பு உடை அணிந்த நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் இயற்பியல் துறையைக் கொண்ட ஏழு மாடி வளாகமான பாரஸ் & ஹோலி கட்டிடத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ப்ரவுன் பல்கலைக்கழகத் தலைவர் பிராங்க் டாய்ல் கூறுகையில், சனிக்கிழமை மதியம் பொறியியல் கட்டிடத்தில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது,அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இலையுதிர் கால செமஸ்டருக்கான இறுதித் தேர்வுகளின் இரண்டாவது நாள் இதுவாகும்.

Continues below advertisement

தேடுதல் வேட்டை

தாக்குதலுக்கு பிறகு தலைமறைவான துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் கண்டுபிடித்து கைது செய்ய தேடுதல் வேட்டை நடந்து வருகிறது, ஐவி லீக் வளாக கட்டிடத்தில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி, அந்த பகுதியின் மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். பல்கலைக்கழக துப்பாக்கிச் சூடு குறித்து தனக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும், சம்பவம் வருத்தம் அளிப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

ஆபத்தான நிலையில் 8 பேர்

பிராவிடன்ஸ் மேயர் பிரட் ஸ்மைலி பேசுகையில், ”காயமடைந்த எட்டு பேரும் ஆபத்தான நிலையில் உள்ளனர், ஆனால் அவர்களது உடல்நிலை நிலையாக உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்களா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை” என தெரிவித்துள்ளார். இதனிடையே தாக்குதல் நடந்த சம்பவத்தில் இருந்த மாணவர்கள் பேசுகையில், துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் அறிந்ததும் ஆய்வகத்தில் இருந்த மாணவர்கள் மேசைகளுக்கு அடியில் ஒளிந்து கொண்டு விளக்குகளை அணைத்துவிட்டு இருட்டில் இருந்தபடி தங்களது உயிரை பாதுகாத்துக் கொண்டனர்” என தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் நடத்தியது யார்?

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கருப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு கடைசியாக நடந்தபடி வெளியேறியதாகவும் துணை காவல்துறைத் தலைவர் திமோதி ஓ'ஹாரா தெரிவித்தார். அதேநேரம், அமெரிக்காவில் கல்லூரி, பள்ளி மற்றும் இரவு விடுதிகள் போன்ற பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது தொடர்கதையாக உள்ளது. ஆனாலும் தனிமனித உரிமை போன்ற சட்ட விதிகளால், துப்பாக்கி புழக்கம் என்பது மிகவும் பரவலாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மையில் ட்ரம்பின் நெருங்கிய நண்பர் கூட துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.