US Election 2024: அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இண்டியானா மற்றும் கென்டகி போன்ற மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 


அமெரிக்க அதிபர் தேர்தல்:


வல்லரசு நாடான அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்தெடுப்பதற்கான தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 18 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், அதில் சுமார் 7 கோடி பேர், முன்கூட்டியே வாக்களிக்கும் வசதியின் மூலம் வாக்களித்துவிட்டனர். மீதமுள்ளோர் வாக்களிப்பதற்கான நடைமுறை நேற்று தொடங்கியது. அதில் சில மாகாணங்களில் வாக்களிக்கும் நேரம் நீட்டிக்கப்பட்டு நள்ளிரவு வரை நடைபெற்று வருகிறது. 50 மாகாணங்களில் இருந்து தேர்தெடுக்கப்பட உள்ள, 538 பிரதிநிதிகளில் 270 பேரின் ஆதரவை பெறுபவர் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவர்.


டிரம்ப் முன்னிலை:


இதனிடையே, சில மாகாணங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குகளை எண்ணும் பணியும் தொடங்கிவிட்டன. அதன்படி, 11 பிரதிநிதிகளை கொண்ட இண்டியானா, 8 பிரதிநிதிகளை கொண்ட கென்டகி மற்றும் வெஸ்ட் வர்ஜினியா ஆகிய மாகாணங்களில் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 11 பிரதிநிதிகளை கொண்ட டென்னிஸீ, 9 பிரதிநிதிகளை கொண்ட அலபாமா, 6 பிரதிநிதிகளை கொண்ட மிஸ்ஸிஸிபி, 9 பிரதிநிதிகளை கொண்ட தெற்கு கரோலினா, 30 பிரதிநிதிகளை கொண்ட ஃபுளோரிடா மற்றும் 7 பிரதிநிதிகளை கொண்ட ஓக்லஹோமா ஆகிய மாகாணங்களிலும் டிரம்ப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


இதுபோக, 16 பிரதிநிதிகளை கொண்ட ஜார்ஜியா மாகாணத்திலும், 6 பிரதிநிதிகளை கொண்ட கன்சாஸிலும், 40 பிரநிதிகளை கொண்ட டெக்சாஸிலும் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 


கமலா ஹாரிஸின் நிலை என்ன?


இதனிடையே, 3 பிரதிநிதிகளை கொண்ட வெர்மோண்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, 11 பிரதிநிதிகளை கொண்ட மஸ்ஸாசுசெட்ஸ் மாகாணத்திலும், 7 பிரதிநிதிகளை கொண்ட கனெக்டிகட் மாகாணத்திலும், 10 பிரதிநிதிகளை கொண்ட மேரிலாண்ட் மாகாணத்திலும் கமலா ஹாரிஸ் வெற்றி வாகை சூடியுள்ளார். 


இதுபோக, 15 பிரதிநிதிகளை கொண்ட மிச்சிகன், 17 பிரதிநிதிகளை கொண்ட ஒஹியோ, 19 பிரதிநிதிகளை கொண்ட பென்சில்வேனியா, 14 பிரதிநிதிகளை கொண்ட  நியூஜெர்சி, 4 பிரதிநிதிகளை கொண்ட நியூ ஹேம்ப்ஷைர், 13 பிரதிநிதிகளை கொண்ட விர்ஜீனியா மற்றும் 16 பிரதிநிதிகளை கொண்ட வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்களிலும் கமலா ஹாரிஸ் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். 


தற்போதைய நிலவரப்படி, டொனால்ட் ட்ரம்ப் 95 பிரநிதி வாக்குகளையும், கமலா ஹாரிஸ் 35 பிரதிநிதிகளின் வாக்குகளை பெற்றுள்ளனர்.