ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று அமெரிக்கா வான்வழித் தாக்குதலை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, காபூலில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இன்று காலை காபூல் வான்வெளியில் ராக்கெட்டுகள் பறக்கம் சத்தம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


காபுல் விமான நிலையத்தை நோக்கி கைர் கானா பகுதியில் காரில் இருந்து ராக்கெட்டுகள் வீசப்பட்டதை பலர் நேரில் கண்டதாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த டோலோ நியூஸ் தெரிவித்து உள்ளது. அதுபோல், காபூல் விமான நிலையத்தின் ஏவுகணை தடுக்கும் இயந்திரத்தின் சத்தத்தையும் உள்ளூர்வாசிகள் கேட்டு உள்ளனர்.


இடைமறிக்கப்பட்ட ராக்கெட் துண்டுகள் வீதிகளில் கிடந்ததாகவும், குறைந்தது ஒரு ராக்கெட்டாவது ஏவப்பட்டு இருக்கும் என்றும் மக்கள் தெரிவித்து உள்ளனர். ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள உள்ள கட்டிடங்களுக்கு மேலே புகை கிளம்பியதையும் பலர் பார்த்து உள்ளனர்.


2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கவிழ்த்து தங்களுக்கு ஆதரவான அரசை நிறுவிய அமெரிக்க அங்கு தங்கள் நாட்டு படைகளை குவித்தது. 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டு இருந்த அமெரிக்கப்படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் திரும்பப் பெறப்பட்டதை தொடர்ந்து தலிபான்கள் ஒவ்வொரு நகரமாக முன்னேறி கடந்த ஆகஸ்டு 15-ம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர்.



அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அமெரிக்கப் படைகளையும் திரும்பப் பெற செவ்வாய்க்கிழமை இறுதிக்கெடு விதித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கப் படைகள் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஆப்கானிஸ்தானையை சேர்ந்த குழந்தைகள் உட்பட பலர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.


ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த இருப்பதாக மிரட்டல் விடுத்த ஐ.எஸ்-கே. அமைப்பை குறி வைத்து வைத்து ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்கா விளக்கம் அளித்தது. இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தியில், ட்ரோன் தாக்குதலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 3 குழந்தைகள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.


ஆப்கானிஸ்தான் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களா என்று விசாரித்து வருவதாகவும் அப்பாவி உயிர்கள் உயிரிழந்து இருந்தால் அது மிகவும் வருத்தமளிக்கும்" என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.


"இன்று காபூலில் ஒரு வாகனத்தின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்தது பற்றிய செய்திகளை நாங்கள் அறிவோம். இந்த தாக்குதலின் முடிவுகளை மதிப்பீடு செய்து வருகிறோம். இது விமான நிலையத்திற்கு ISIS-K அமைப்பின் அச்சுறுத்தல் இருந்தது." என அமெரிக்காவின் CENTCOM அமைப்பின் தலைவர் பில் அர்பன் விளக்கம் அளித்து உள்ளார்.