அமெரிக்கா செல்வதற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, தொற்று நோய்களுக்கான பரிசோதனை, தடுப்பூசி வரலாறு, தொற்று நோய்கள் மற்றும் மனநல நிலைமைகள் ஆகியவற்றைச் சரிபார்ப்பது எப்போதும் விசா விண்ணப்ப செயல்முறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. ஆனால், தற்போது புதிய மருத்துவ பரிசோதனைகள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. அதன்படி, இனி குண்டாக இருப்பவர்கள், நீரிழிவு, இதய நோய் இருப்பவர்கள் அமெரிக்கா செல்வது கடினமாக இருக்கும் என கருதப்படுகிறது.
அமெரிக்க விசாவிற்கு புதிய கட்டுப்பாடுகள்
அமெரிக்கவின் அதிபராக டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்றபின், குடியேற்ற நடைமுறைகளில் கடும் கெடுபிடிகளை காட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் 'ஹெச்-1பி' விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத வகையில் ஒரு லட்சம் டாலராக உயர்த்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். இந்நிலையில், அடுத்ததாக தற்போது, அமெரிக்க விசாவுக்காக விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு, விரிவான உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்படி, வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, அமெரிக்க விசாவுக்கு வெளிநாட்டினர் விண்ணப்பிக்கும்போது, விரிவான உடல் பரிசோதனையை மேற்கொள்ளும்படி, அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டுள்ளதைத் தொடர்ந்து, விசா பெறுவது மேலும் கடினமாகி உள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை, தன் துாதரகங்கள் மற்றும் துணை துாதரகங்களுக்கு அனுப்பியுள்ள ரகசிய சுற்றறிக்கையில், 'விசா கோரும் விண்ணப்பங்களை அதிகாரிகள் மதிப்பிடும் போது, விண்ணப்பதாரரிடம் மிகவும் விரிவான உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்த வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய மருத்துவ பரிசோதனைகள் என்னென்ன.?
அமெரிக்காவில் வசிக்க விசாவிற்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினருக்கு நீரிழிவு நோய் அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால், அவர்கள் நிராகரிக்கப்படலாம் என்று டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அரசாங்க உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி, இதயம், சுவாசம், புற்று நோய், நீரிழிவு, வளர்சிதை மாற்றம், நரம்பியல் மற்றும் மனநலம் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு தேவையான பணத்தை செலவழிக்கக் கூடியவர்களா என்பதை விசா அதிகாரிகள் மதிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர் அரசின் உதவியை நாடமாட்டார் அல்லது அரசு செலவில் நீண்ட கால மருத்துவ பராமரிப்புக்கு செல்லமாட்டார் என்பதை உறுதி செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த புதிய நடைமுறையின்படி, உடல் பருமன், நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் பாதிக்கப்பட்டோரின் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
மேலும், விண்ணப்பங்களைத் தவிர, குழந்தைகள் அல்லது வயதான பெற்றோர் போன்ற குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலையை விசா அதிகாரிகள் மதிப்பிட வேண்டும் என்றும் வழிகாட்டுதல் கூறுகிறது. "சார்ந்திருப்பவர்களில் யாருக்காவது குறைபாடுகள், நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் அல்லது பிற சிறப்புத் தேவைகள் உள்ளதா, மேலும் விண்ணப்பதாரர் வேலைவாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு கவனிப்பு தேவையா?" என்றும் ஆராயப்படுகிறது.
இத்தகைய கடும் கட்டுப்பாடுகளால், இனி அமெரிக்கா செல்லும் வெளிநாட்டினர், அவ்வளவு எளிதில் விசா பெற முடியாது என்பது தெளிவாகிறது.