காண்டா மிருகங்களை தலைகீழாக தொங்கவிடப்பட்டு ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் சென்றால் என்ன நடக்கும் என ஆராய்ச்சி செய்தவருக்கு இந்த ஆண்டின் வித்தியாசமான விருது வழங்கப்பட்டுள்ளது. 


ஒவ்வொரு வருடமும் அறிவியல் துறையில் வித்தியாசமான முறையில் ஆய்வு செய்து சாதனை புரிந்தவர்களுக்கு வேடிக்கையாக இக்-நோபல் பரிசு எனும் விருது வழங்கப்படுகிறது. இது நோபல் பரிசு அல்ல. ஆனால் பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பதுதான் இந்த விருதின் நோக்கம். இந்த விருதுகள் நிஜமான நோபல் பரிசு வென்றவர்களால் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் . இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஆன்லைனிலேயே விருதுகள் வழங்கப்பட்டன.


 ஆப்பிரிக்காவில் காண்டா மிருகங்களை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு மாற்றும் பொருட்டு அவற்றை ஹெலிகாப்டரில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு எடுத்துச் செல்வது வழக்கம். இந்நிலையில் விலங்கு ஆராய்ச்சியாளர் ராபின் ரேட் க்ளிஃப் காண்டா மிருகங்கள் தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டார். ஆராய்ச்சிக்காக 12 காண்டா மிருகங்களை 10 நிமிடங்களுக்கு க்ரேனில் தலைகீழாக தொங்கவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.




ஆய்வின் முடிவில் காண்டா மிருகங்களை ஒரு பக்கமாக படுக்க வைத்து கொண்டு செல்வதை விட, தலைகீழாக கால்களில் கயிறுக் கட்டி கொண்டு செல்வதன் மூலம் அவற்றின் இரத்த ஓட்டம் சீராக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. படுக்க வைத்து எடுத்து செல்லும்போது காண்டா மிருகங்களின் ரத்த ஓட்டம், ஈர்ப்பு விசையின் காரணமாக பாதிக்கப்படுவதாகவும், உடலின் மற்ற மேல் பகுதிகளுக்கு ரத்தம் போதிய அளவில் செல்வதில்லை என்று கூறப்படுகிறது. 




இந்நிலையில் காண்டா மிருகங்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல தலைகீழாக தொங்கவிடப்பட்டு கொண்டு செல்லும் முறையே பாதுகாப்பானது என ஆய்வில் முடிவில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியை செய்த ரேட் க்ளிஃப்பிற்கு சிறந்த ஆராய்ச்சிக்கான இக் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 


அதே போல அடிகளின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ளவே ஆண்கள் தாடி வளர்க்க துவங்கியிருக்கலாம், அது ஒரு பரிணாம வளர்ச்சியாகக்கூட இருக்கக்கூடும் என்று ஆய்வின் மூலம் கண்டுபிடித்தவருக்கு அமைதிக்கான இக் நொபெல் பரிசு வழங்கப்பட்டது. மேலும் சுற்றுச்சூழலுக்கான பரிசு, உலகெங்கும் நடைபாதைகளில் வீசப்படும் சூயிங் கம்மிலிருந்து பரவும் பாக்டீரியாக்கள் பற்றி ஆய்வு செய்தவருக்கு வழங்கப்பட்டது.  அதே போல மருத்துவத்துறைக்கான பரிசு, மூக்கடைப்பை நீக்க மருந்துகள் உதவுவது போலவே உடலுறவு கொள்வதும் உதவுவதாக ஆராய்ச்சி செய்தவருக்கு வழங்கப்பட்டது. 


நையாண்டியாக வழங்கப்படும் இந்த விருதிற்கு ஒரு காகித கோப்பையும், ஜிம்பாப்வே நாட்டின் போலி 10 ட்ரில்லியன் ரூபாய் நோட்டுகளும் பரிசாக வழங்கப்பட்டன.