இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி புதிய வீடியோவில் தோன்றி பேசியிருப்பது அமெரிக்கா உள்பட உலக நாடுகளுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி உலகமே அச்சத்தில் உறைந்து போகும் வகையில் அமெரிக்காவில் புதுவிதமாக பயங்கரவாத தாக்குதலை நடத்தியது அல் கொய்தா பயங்கரவாத அமைப்பு. பயணிகளுடன் விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகள் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள், ராணுவ தலைமையகம் பென்டகன், பென்சில்வேனியா என அடுத்தடுத்து ஐந்து தாக்குதல்களை நடத்தியது. இரட்டைக் கோபுரமாக ஒய்யாரமாக நின்றிருந்த உலக வர்த்தக மையம் தரைமட்டமானது. பல நூறு பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பு பொறுப்பேற்றது. 


அந்தத் தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாத தடுப்புக் கொள்கைகளை அமெரிக்கா மட்டுமல்ல உலக நாடுகளே வலுப்படுத்தின.




அல் கொய்தாவின் தலைவராக இருந்த ஒசாமா பின் லேடனை எப்படியாவது அழிக்க வேண்டும் என அமெரிக்கா துடித்தது. அப்போதுதான் ஒசாமா ஆப்கானிஸ்தானில் தஞ்சம் புகுந்தது தெரிந்தது. ஒசாமாவை ஒழிக்க ஆபகானிஸ்தான் அரசிடம் உதவி கோரியது. ஆப்கானிஸ்தான் தலிபான்கள் பிடியில் சிக்கியிருந்தது. இதனையடுத்து அமெரிக்கா அல் கொய்தாவை அழிக்க தலிபான்களையும் பொது எதிரியாகக் கொண்டது. தலிபான்களின் பிடி படிப்படியாக தளர்ந்தது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. அமெரிக்காவுக்கு ஆதரவாக நேட்டோ படைகளும் களமிறங்கின. இறுதியாக 2011-இல் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபோதாபாத்தில் கொல்லப்பட்டார். உடலைக் கூட யாரிடமும் ஒப்படைக்காமல் கடலில் அப்புறப்படுத்தியது அமெரிக்காவின் நேவி ஸீல் படை.


ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல் கொய்தா அழிந்துவிடும் என நினைத்த நிலையில் அதன் புதிய தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி பொறுப்பேற்றார். ஆனால், இடையில் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.


இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி அமெரிக்கா இரட்டைக் கோபுர தாக்குதலின் 20 வது ஆண்டு நினைவு தினத்தைக் கடைபிடித்தது. இந்தச் சூழலில் அய்மான் அல் ஜவாஹிரி தோன்றும் புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் அல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி 60 விநாடிகள் அதாவது முழுமையாக ஒரு மணி நேரம் பேசியுள்ளார். வீடியோவில் அவர் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி சிரியாவில் ரஷ்ய ராணுவத் தளத்தை அல் கொய்தா ஆதரவு இயக்கமான ஹூராஸ் அல் தீன் இயக்கத்தினர் அழித்தது பற்றி பேசியுள்ளார்.  ஆகையால் இந்த வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டதாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த வீடியோ அமெரிக்காவை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக தலிபான்கள் பெற்றுள்ள வெற்றி அல் கொய்தாவின் வெற்றியாகவும் கருதப்படுகிறது.