ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்தியாவும் பாகிஸ்தானும் எளிதில் கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடிய இராணுவ மோதலைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார் , மேலும் இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

ஐ.நா சபை வேதனை:

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்த அன்டோனியோ குட்டெரெஸ், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மோதல் போக்கு நோக்கி செல்வதைக் கண்டு வேதனை அடைவதாகக் கூறினார். 

இது குறித்து அவர் பேசுகையில் " இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் பல ஆண்டுகளாக இருந்த நிலையில் அது தற்போது உச்சத்தை எட்டியுள்ளன. இரு நாடுகளின் அரசாங்கங்கள் மற்றும் மக்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பணிகளுக்கு, குறிப்பாக ஐ.நா. அமைதி காக்கும் பணிகளுக்கு அவர்கள் அளித்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்கும் நான் ஆழ்ந்த மரியாதை செலுத்துகிறேன், மேலும் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனவே இரு நாட்டு உறவுகள் மோசமான நிலையில் இருப்பதை காண்பது எனக்கு வேதனை அளிக்கிறது" என்று ஐ.நா. தலைமையகத்தில் ஆற்றிய உரையில் குட்டெரெஸ் கூறினார்.

தாக்குதலுக்கு இரங்கல்:

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்த அவர், " ஏப்ரல் 22 அன்று பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட கொடூரமான உணர்வுகளை நான் புரிந்துகொள்கிறேன். அந்தத் தாக்குதலை மீண்டும் ஒருமுறை வன்மையாகக் கண்டிக்கிறேன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

பொதுமக்களை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அரசு பொறுப்பில் உள்ளவர்கள்  சட்டபூர்வமான வழிகளில் நீதியை நிலைநிறுத்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் கூறினார். கட்டுப்பாட்டை மீறக்கூடிய இராணுவ மோதலைகளை தவிர்க்குமாறு இரு நாடுகளையும் அவர் வலியுறுத்தினார்.

வேண்டாம் மோதல்

"கட்டுப்பாட்டை மீறக்கூடிய இராணுவ மோதலைத் தவிர்ப்பதும் அவசியம், குறிப்பாக இந்த முக்கியமான நேரத்தில். அதிகபட்ச நிதானத்தையும், இந்த நிலையில் இருந்து  பின்வாங்குவதற்கான நேரமும் இதுதான். இரு நாடுகளுடனும் எனது தொடர்ச்சியான தொடர்புகளில் இதுவே எனது செய்தியாக இருந்து வருகிறது. தவறாக நினைக்காதீர்கள், இராணுவத் சண்டை என்பது தீர்வாகாது, அமைதிக்காக இரு அரசாங்கங்களுக்கும் எனது நல்லெண்ணத்தை வழங்குகிறேன்," என்று அவர் கூறினார்.

பதற்றத்தைத் தணிக்கவும் அமைதிக்காக எடுக்கும் உறுதிப்பாட்டை ஊக்குவிக்கும் எந்தவொரு முயற்சியையும் ஆதரிக்க ஐக்கிய நாடுகள் சபை தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.