ட்விட்டரை எலன் மஸ்க் வாங்கிய பிறகு செலவைக் குறைப்பதற்காக ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்த நிலையில், வேலை பளு அதிகமான காரணத்தால் ட்விட்டர் ஊழியர் ஒருவர் நிறுவனத்தின் அலுவலகத்தில் தரையிலேயே தூங்கும் படம் கடந்த வாரம் சமூக ஊடக தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அலுவலகத்தில் தூங்கிய ஊழியர்


ட்விட்டரில் தற்போது வேலை செய்யும் பலருக்கு, எலன் மஸ்க் தரும் கடுமையான டெட்லைனை ஊழியர்கள் மீது திணித்ததால் ஏற்பட்டுள்ள விளைவை இந்த படம் குறிக்கிறது. அங்கு படுத்து உறங்கிய ஊழியர் எஸ்தர் க்ராஃபோர்டின் புகைப்படம் உலகளாவிய அளவில் வைரலாகப் பரவியது. வைரலாக பரவியதன் மூலம் அவருடைய பணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. மேலும் பெரிய பணிநீக்கங்களில் இருந்து தப்பிய அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர் என்று பிசினஸ் இன்சைடர் தெரிவித்துள்ளது. ட்விட்டரில் பலர் அவர் மீது அனுதாபம் தெரிவித்தாலும், மற்றவர்கள் அவரது பணி நெறிமுறையை கேள்வி எழுப்பினர். பொதுமக்களின் உணர்வு என்னவாக இருந்தாலும், க்ராஃபோர்டின் வேலை தற்போது பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிகிறது. தூங்கியதற்காக அவர் மீது எலன் மஸ்க் நடவடிக்கைகள் எடுக்கவில்லை.






அதிக நேரம் வேலை செய்யும் ஊழியர்கள்


அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, எஸ்தர் க்ராஃபோர்ட் ட்விட்டரில் தயாரிப்பு நிர்வாகத்தின் இயக்குநராக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர் நிறுவனத்தின் மாற்றத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். பிசினஸ் இன்சைடர் அவர் தூங்கியதை "கடும் புயலை (வேலையை) எதிர்க்கும் மிஸ். க்ராஃபோர்டின் வெளிப்படையான திறன்" என்று குறிப்பிடுகிறது. பிசினஸ் இன்சைடரின் கூற்றுப்படி, ட்விட்டரில் உள்ள ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கிறார்கள், ஏனெனில் மஸ்க் முக்கிய திட்டங்களுக்கு கடுமையான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது. 


தொடர்புடைய செய்திகள்: Twitter Official Badge: இனி போலி கணக்குக்கு ’பாய்’ ’பாய்’..ட்விட்டர் பக்கத்தில் அடுத்த ட்விஸ்ட்.. அதிகாரபூர்வமாக வந்த புதிய அப்டேட்.!


ட்வீட் வைரல்


ட்விட்டர் ஸ்பேஸ்ஸின் தயாரிப்பு மேலாளரான இவான் ஜோன்ஸ், அலுவலகத் தளத்தில் தூங்குவதையும், ஸ்லீப்பிங் பேக்கில் சுருண்டு கிடப்பதையும், தூக்க முகமூடியை கண்களுக்கு மேல் இழுத்ததையும் காட்டும் வைரலான புகைப்படத்தை முதலில் பகிர்ந்து, "எலன் ட்விட்டரில் உங்கள் முதலாளியிடமிருந்து உங்களுக்கு ஏதாவது தேவைப்படும்போது," என்று எழுதினார். உறங்கிய எஸ்தர் க்ராஃபோர்ட் புகைப்படத்தை மறு ட்வீட் செய்து, எழுதினார்: "உங்கள் குழு டெட்லைனை உருவாக்க கடிகாரத்தை சுற்றிக் கொண்டிருக்கும் போது சில நேரங்களில் நீங்கள் வேலை செய்யும் இடத்திலேயே தூங்க வேண்டியிருக்கும் #SleepWhereYouWork." என்று எழுதினார்.






தியாகம் தேவை


மஸ்கின் டெட்லைனை பூர்த்திசெய்ய கூடுதல் மணிநேரம் ஒதுக்குமாறு மேலாளர்கள் ஊழியர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் தான் எஸ்தர் க்ராஃபோர்ட் அலுவலகத்தில் தூங்கியுள்ளார். அவரது புகைப்படம் வைரலான பிறகு, அவர் பின்தொடர்பவர்களிடமிருந்து பெற்ற விமர்சனங்களைப் பற்றி பேசினார். சில நேரங்களில் இந்த வேலைக்கு "தியாகம் தேவை" என்று குறிப்பிட்டார். அவர் ட்விட்டரில் எழுதுகையில், "சிலர் தங்கள் மனதை இழக்கிறார்கள் என்பதால், நான் விளக்குகிறேன்: கடினமான காரியங்களுக்கு தியாகம் (நேரம், ஆற்றல் போன்றவை) தேவைப்படுகிறது. உலகம் முழுவதும் என் அணியினர் உள்ளனர், அவர்கள் புதிதாக ஒன்றைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். வேலையும் கெடாமல், தூக்கமும் கெடாமல் இருப்பது எனக்கு அவசியம்", என்றார். மேலும், "நாங்கள் பரவலாக #LoveWhereYouWork என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்துகிறோம், அதனால்தான் நான் #SleepWhereYouWork என்று மறு ட்வீட் செய்தேன். நாங்கள் தொடர்ந்து செல்கிறோம். எங்கள் வலிமை மற்றும் நெகிழ்ச்சிக்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன்," என்று அவர் மேலும் கூறினார்.