காசாவில் கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய போர் 3 மாதங்களாக தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்த அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், பாலஸ்தீனத்தில் உள்ள காசாவில் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.


காசா போரால் நிலைகுலைந்த மக்கள்: 


இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 24,620 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். போர் நிறுத்தம் அறிவிக்கக் கோரி உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இன்னும் பல மாதங்களுக்கு போர் நீடிக்க உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.


இந்த நிலையில், காசா பல்கலைக்கழகத்தில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், குண்டு வைத்து தகர்ப்பது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பல்கலைக்கழகத்தில் யாரும் இல்லாதது போன்று தெரிகிறது. பல்கலைக்கழகத்திற்கு உள்ள மறைத்து வைக்கப்பட்ட குண்டு வெடித்து சிதறியதில் கட்டிடம் சுக்குநூறாகிறது.


அதுமட்டும் இன்றி, குண்டு வெடித்ததில் பல்கலைக்கழகத்தின் நாலா புறமும் கட்டிடம் சிதறி அதன் அதிர்வலைகள் பரவுவது பார்ப்பதற்கே அதிர்ச்சியூட்டுகிறது. இந்த வீடியோ குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மில்லர், எந்த வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து இன்னும் தெரியவரவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.


சுக்குநூறாக சிதறிய காசா பல்கலைக்கழகம்:


இந்த வீடியோ குறித்து தெளிவுப்படுத்தும்படி அமெரிக்கா, இஸ்ரேலை கேட்டு கொண்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு வலுவாக உள்ள பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், தெற்கு காசாவின் முக்கியமான நகரமான கான் யூனிஸில் துப்பாக்கிச்சூடும் வான் வழி தாக்குதலும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.


 






அல்-அமல் மருத்துவமனைக்கு அருகே பீரங்கிகளை கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரே நாள் இரவில், பீரங்கி தாக்குதலால் 77 பேர் உயிரிழந்ததாக காசா சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. 100 நாட்களை கடந்து நடந்து வரும் போரால் காசாவின் மொத்த மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர், அதாவது 24 லட்சம் பேர், தங்களின் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.


பாலஸ்தீன மக்களில் பெரும்பான்மையானோர் முகாம்களில் வசிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். உணவு, தண்ணீர், எரிபொருள், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்து வருகின்றனர். 


இதையும் படிக்க: Iran Pakistan Attacks: பாகிஸ்தான், ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம்.. இந்தியா எடுத்த அதிரடி நிலைபாடு.. முழு பின்னணி