காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டுவர ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு, 14 நாடுகள் ஆதரவும் மற்றும் அமெரிக்காவின் முடிவை தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
போர் நிறுத்த தீர்மானம்:
கடந்த 5 மாதங்களுக்கு மேலாக, இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 107 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் காசா மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாவும் 72 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில் காசாவில் போர் நிறுத்தத்தை கொண்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின்படி, காசாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வருவது மற்றும் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுவிப்பது உள்ளிட்ட அம்சங்கள் முக்கியமானவையாகும்.
அமெரிக்கா புறக்கணிப்பு:
இதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது, அமெரிக்கா தனது எதேச்சதிகாரத்தை ( வீட்டோ அதிகாரம்) பயன்படுத்தி இஸ்ரேலுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலியர்களின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என கூறி, போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு எதிராக வாக்களித்தது. இதனால், போர் நிறுத்த ஒப்பந்ததுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்ற முடியாத சூழல் இருந்தது.
இந்நிலையில், நேற்று ( திங்கட்கிழமை ) ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 14 ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா ஆதரவாகவும் வாக்களிக்கவில்லை எதிராகவும் வாக்களிக்கவில்லை. இதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் காசாவில் உடனடியாக தீர்மானம் நிறுத்த வேண்டும். மேலும், பிடித்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐ. நா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்தார்.
நட்பு உடைகிறதா?
இந்நிலையில், அமெரிக்காவுக்கு வீட்டோ அதிகாரம் இருப்பதால், எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் தீர்மானம் நிறைவேறி இருக்காது. இஸ்ரேல் நட்பு நாடாக இருந்த அமெரிக்காவின் இந்த முடிவு இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையே விரிசல் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவால், அமெரிக்காவுக்கு வருகை தர நினைத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது பயணத்தை ரத்து செய்தார். இதையடுத்து மிகவும் நெருங்கிய நட்பு கொண்ட நாடுகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக பேச்சுக்கள் எழ ஆரம்பித்தன.