உயிர்த் தியாகம் செய்த அமைதிப் படையினருக்காக புதிய நினைவுச் சுவர் உருவாக்க வேண்டுமென இந்தியா முன்மொழிந்த தீர்மானத்திற்கு ஐ.நா. பொதுச்சபை ஒப்புதல் அளித்துள்ளது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.






இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டரில்,  “உயிர்த் தியாகம் செய்துள்ள அமைதிப்படை வீரர்களுக்கு புதிய நினைவுச் சுவர் அமைக்க வேண்டுமென்ற இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேறியிருப்பது பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தத் தீர்மானத்திற்கு சாதகமாக 190 நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. ஒவ்வொருவரது ஆதரவுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.  


முன்னதாக, ஐ.நா பொதுச் சபையில்,  உயிர் தியாகம் செய்த அமைதிப்படை வீரரகளை கவுரவிக்கும் வகையில்  நினைவுச் சுவர்  அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டில் அமைதியை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.  


இந்தியாவின் பிரதிநிதி ருசிரா கம்போஜ், ‘உயிர் தியாகம் செய்த  ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை வீரர்களுக்கான நினைவுச் சுவர்’ என்ற வரைவுத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தி, 125 நாடுகளைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் உலகளவில் 71 அமைதி காக்கும் திட்டத்தில் பணியாற்றியுள்ளனர் என்பதை சுட்டிக்காட்டினார். "இன்றும் கூட, 80,000 க்கும் மேற்பட்ட அமைதிப்படையினர் பல்வேறு சூழலில் பணியாற்றி வருகின்றனர், கடுமையான வானிலை சூழ்நிலைகளை சகித்து, அமைதியை காக்க தங்கள் உயிரை பணயம் வைத்துள்ளனர்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 4,200 க்கும் மேற்பட்ட அமைதிப்படையினர் சேவையின் போது தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.  


இந்தியா மூன்று வாரங்களுக்கு முன் ஐநா இணையதளத்தில் இந்த வரைவுத் தீர்மானத்தை பதிவேற்றியது. இதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா உட்பட 190 நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. ஐநா பொது சபையானது இந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் நியூயார்க்கில் உள்ள ஐ.நா.வில் உயிர் தியாகம் செய்த அமைதிப்படை வீரர்களின் நினைவை போற்றும் வகையில் ஒரு நினைவுச் சுவர் அமைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  நினைவு சுவர் கட்டுமானம், பராமரிப்பு முற்றிலும் தன்னார்வ பங்களிப்புகளிலிருந்து நிதியளிக்கப்படும் என்பதால், ஐநா பொது சபை, ஆர்வமுள்ள நாடுகளை பங்களிப்புகளை வழங்க அழைப்பு விடுத்துள்ளது. ஐ.நா. வின் அமைதிப்படை வீரர்களின் சர்வதேச தினம் மற்றும் ஐ.நா.வின் அமைதி காத்தல் தொடர்பான பிற நிகழ்வுகளில் நினைவுச் சுவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.