Ukraines Drone Blitz: உக்ரைன் ரஷ்யா இடையேயான போரில் அதிக சேதங்களை ஏற்படுத்திய தாக்குதலாக, இந்த ட்ரோன் தாக்குதல் இருக்கும் என கூறப்படுகிறது.
ரஷ்யாவிற்குள் ட்ரோன் தாக்குதல்:
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் 2 ஆண்டுகளை கடந்து தொடர்ந்து வரும் நிலையில், தற்போது அது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உக்ரைன் மிக முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, “ரஷ்யாவின் எல்லைக்குள் மிக ஆழமாக புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்தி, 40-க்கும் அதிகமான போர் விமானங்களை சேதப்படுத்தினோம். போர் தொடங்கியதில் இருந்து அதிக சேதத்தை ஏற்படுத்திய உக்ரைனின் ட்ரோன் தாக்குதலாக இது இருக்கும்” அந்நாட்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடந்தது எப்படி?
பெயர் குறிப்பிட விரும்பாத உக்ரைன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தாக்குதல் தொடர்பாக கூறுகையில், ”இந்த ட்ரோன் தாக்குதலை திட்டமிட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஆனது. உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரடியாக இந்த தாக்குதலை மேற்பார்வையிட்டார். ட்ரோன்கள் லாரிகள் மூலம் கண்டெய்னர்களில் வைத்து கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ரஷ்ய பிரதேசத்திலிருந்து ஏவப்பட்டு, உக்ரைனில் இருந்து 4,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்நாட்டின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள பெலாயா விமானத் தளம் உட்பட பல விமானநிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த 41 குண்டுவீச்சு விமானங்களைத் தாக்கின” என அந்த அதிகாரி விளக்கியுள்ளார்.
4 விமான தளங்கள் மீது தாக்குதல்:
வெளியாகியுள்ள கூடுதல் தகவல்களின்படி, உக்ரைன் பாதுகாப்பு அமைப்பால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் 4 ராணுவ விமான தளங்கள் அடுத்தடுத்து குறிவைக்கப்பட்டுள்ளன. இதில், உக்ரைன் மீது நீண்ட தூர ஏவுகணைகளை ஏவ மாஸ்கோ பயன்படுத்திய Tu-95 மற்றும் Tu-22 போன்ற குண்டுவீச்சு விமானங்களும் தாக்கப்பட்டவற்றில் அடங்கும்” என்று கூறப்படுகிறது. மேலும் தாக்குதல்களைக் காட்டும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. அதில் Tu-95 குண்டுவீச்சு விமானங்கள் உட்பட பல பெரிய விமானங்கள் தார் சாலையில் எரிவதைக் காண முடிகிறது. ஆனால், அவை உண்மையா என்பதை ஏபிபி நிறுவனத்தால் சுயமாக சரிபார்க்கப்பட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பேச்சுவார்த்தைக்கு மத்தியில் தாக்குதல்:
ரஷ்யாவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் இஸ்தான்புல்லுக்கு ஒரு குழுவை அனுப்பும் என்று திங்களன்று ஜெலென்ஸ்கி அறிவித்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் ஏழு ஏவுகணைகளுடன் 472 ட்ரோன்களையும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. முன்னதாக, உக்ரேனிய ராணுவப் பயிற்சிப் பிரிவின் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 12 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உக்ரேனிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, வடக்கு உக்ரைனில், சுமி பகுதியில் உள்ள ஒலெக்ஸிவ்கா கிராமத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் முன்னேற்றங்களுக்கு மத்தியில், சனிக்கிழமை சுமியில் உள்ள 11 கூடுதல் குடியிருப்புகளில் இருந்து மக்களை வெளியேற்ற உக்ரைன் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.