ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனின் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தகவல் தெரிவித்துள்ளது.


உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா இன்று போர் தொடுப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததை தொடர்ந்து, உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 


ஐ.நா. மற்றும் உலக நாடுகளின் கோரிக்கையை புறந்தள்ளிய ரஷ்யா, கடந்த பல மணிநேரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.  உக்ரைன் நாட்டின் விமானத்தளங்கள், வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புகளை அழித்துவிட்டதாக ரஷ்யா தகவல் தெரிவித்துள்ளது. பதிலடி தாக்குதலாக ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. லுஹான்ஸ்க் நகரில் 5 போர் விமானங்களுடன், ரஷ்யாவின் ஹெலிகாப்டரையும் வீழ்த்திருப்பதாகவும் கூறியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.




ரஷ்யா தாக்குதலில் தங்களது நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசு தகவல் கூறியிருந்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதலில் பொதுமக்கள் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், படுகாயம் அடைந்த 9 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அரசு  கூறியுள்ளது.


இதனிடையே, ரஷ்ய போர் விமானங்களின் குண்டு மழை தலைநகர் கீவ் மீது பொழிவதால் நகரை காலி செய்துவிட்டு மக்கள் வெளியேறுகின்றனர். உக்ரைனின் மேற்கு எல்லையில் உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கான கார்களில் கீவ் நகர மக்கள் புறப்பட்டு செல்கின்றனர்.


முன்னதாக, உக்ரைனில் உள்ள ராணுவ மற்றும் விமான தளங்கள் தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும், உக்ரைன் மக்கள் மீதும், குடியிருப்புகளிலும் தாக்குதல் நடத்தவில்லை என்றும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது. அதிக அளவில் தற்காப்பு, அதிக பாதுகாப்பு கொண்ட ஆயுதங்களால் மட்டுமே உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறியது. மேலும், உக்ரைன் மீது நடத்தப்படுவது போர் அல்ல என்றும், ராணுவ நடவடிக்கை எனவும் ரஷ்யா விளக்கமளித்துள்ளது. மேலும், உக்ரைனில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கும் எண்ணமில்லை என்றும் அதிபர் புடின் கூறியிருந்தார்.


ராணுவம் தனது வேலைகளை செய்து வருவதால் நாட்டு மக்கள் யாரும் பதட்டமடைய வேண்டாம் என்றும், மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் உக்ரைன் நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர