உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதே இலக்கு என்றும், அமைதி திரும்பிய உடன் அதிபர் பதவியை விட்டு விலகத் தயார் என்றும் அறிவித்துள்ளார். அவர் இப்படி கூறுவதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் உள்ளது. அது என்னவென்று தெரியுமா.? அது குறித்து தற்போது பார்க்கலாம்.

தேர்தல் நடத்தாமல் அதிபர் பதவியில் தொடரும் ஜெலன்ஸ்கி

முன்னாள் நகைச்சுவை நடிகரான உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த 2019-ம் ஆண்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டு உக்ரைனில் அதிபர் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. இதனால், ராணுவச் சட்டம் காரணமாக, உக்ரைன் அதிபராக ஜெலன்ஸ்கியே தொடர்ந்து வருகிறார்.

ஆனாலும், உக்ரைனில் அதிபர் தேர்தலை நடத்தாமல், சட்டவிரோதமாக ஜெலன்ஸ்கி ஆட்சி செய்துவருவதாக ரஷ்யா குற்றம்சாட்டியது. இந்நிலையில் தான், தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜெலன்ஸ்கி.

“அமைதி திரும்பினால் பதவி விலகத் தயார்“

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஊடகம் ஒன்றிற்கு நேற்று அளித்த பேட்டியில், ரஷ்யா உடனான போர் முடிவுக்கு வந்தால், அதிபர் பதவியில் இருந்து தான் விலகத் தயார் என்று கூறியுள்ளார். போர் சமயத்தில் உக்ரைனுக்கு உதவும் நோக்கிலேயே தான் பதவியில் நீடிப்பதாக தெரிவித்துள்ள அவர், போரை முடிவுக்கு கொண்டு வருவதே தனது இலக்கு என்றும் கூறியுள்ளார்.

மேலும், அப்படி ஒரு போர் நிறுத்தம் ஏற்பட்டால், அதிபர் தேர்தலை நடத்துமாறு நாடாளுமன்றத்திடம் கேட்டுக்கொள்வேன் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். போர்நிறுத்தத்தால் ஏற்படும் பாதுகாப்பான சூழல், தேர்தலை நடத்த வாய்ப்புகளை அளிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக ரஷ்யாவை எச்சரிக்கை விதத்தில் பேசிய ஜெலன்ஸ்கி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில், ட்ரம்ப் உடனான சந்திப்பின்போது, உக்ரைனில் அமைதி திரும்பினால் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். போர் நடக்கும்போது நாடாளுமன்றம் இயங்காது எனவும், அதனால் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் இல்லை என்றும், வெளிப்படையான தேர்தல் நடைபெறுவது மக்களுக்கு அவசியம் என்றும் ஜெலன்ஸ்கி கூறினார்.

மேலும், ரஷ்யா போரை நிறுத்தாத பட்சத்தில், அமெரிக்காவிடமிருந்து தொலைதூரம் சென்று தாக்கும் ஆயுதங்கள் தேவை என்றும் வலியுறுத்திய ஜெலன்ஸ்கி, அது கிடைக்கும்போது, ரஷ்ய அதிகாரிகள், அவர்களுக்கு அருகே பதுங்கு குழிகள் எங்கே இருக்கின்றன என்பதை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று  எச்சரிக்கை விடுக்கும் வகையில் கூறினார் ஜெலன்ஸ்கி.

ரஷ்யா பதிலடி

ஜெலன்ஸ்கியின் இந்த பேச்சுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ், பதுங்கு குழியில் பதுங்கினாலும் தப்ப முடியாத அளவிற்கான ஆயுதங்களை ரஷ்யா பயன்படுத்தும் எனவும், அமெரிக்கா அதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பதில் எச்சரிக்கை விடுத்தார்.

இதை வைத்து பார்க்கும்போது, ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை என்று தான் தெரிகிறது. இது எங்கு போய் முடியும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.