Elon Musk Rich: கடந்த அக்டோபரில் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற சாதனையை எலான் மஸ்க் படைத்தது குறிப்பிடத்தக்கது.
600 பில்லியன் டாலர்களை கடந்த சொத்து மதிப்பு:
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், 600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 54 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிகர சொத்து மதிப்பை எட்டிய முதல் நபர் என்ற பெருமையை திங்கட்கிழமை பெற்றுள்ளார். அவரது ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ட்அப் 800 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் சந்தையில் பட்டியிலிடப்பட வாய்ப்புள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து, அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபரில் தான் 500 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான நிகர சொத்து மதிப்பை கொண்ட முதல் நபர் என்ற பெருமையை எலான் மஸ்க் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஸ்பேஸ் எக்ஸில் எலான் மஸ்க் ஆதிக்கம்:
அடுத்த ஆண்டு பொது சந்தையில் பட்டியலிட தயாராகி வரும் ஸ்பேஸ்எக்ஸில், அதன் நிறுவனரான எலான் மஸ்க் 42% பங்குகளை கைவம் வைத்துள்ளாராம். ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை சந்தையில் பட்டியலிடும் செய்தியானது மஸ்க்கின் சொத்து மதிப்பை, திங்கட்கிழமை மதியம் 12 மணி நிலவரப்படி (அமெரிக்க நேரம்) 168 பில்லியன் டாலர் அதிகரித்து 677 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
எலான் மஸ்கின் சொத்து விவரங்கள்:
உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவில் மஸ்க் சுமார் 12% பங்குகளை வைத்திருப்பதால் அவரது சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. விற்பனையில் சரிவு இருந்தபோதிலும், இந்த ஆண்டு இதுவரை பங்குகள் 13% உயர்ந்துள்ளன. முன் பயணிகள் இருக்கையில் பாதுகாப்பு கண்காணிப்பாளர்கள் (மனித ஓட்டுனர்கள்) இல்லாமல், ரோபோ டாக்சியை நிறுவனம் சோதித்து வருவதாக மஸ்க் கூறியதைத் தொடர்ந்து திங்களன்று நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 4 சதவிகிதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் மாதத்தில், டெஸ்லா பங்குதாரர்கள் மஸ்க்கிற்கு $1 டிரில்லியன் ஊதியத் திட்டத்தை அங்கீகரித்தனர், இது வரலாற்றில் மிகப்பெரிய கார்ப்பரேட் ஊதியத் தொகுப்பாகும், ஏனெனில் முதலீட்டாளர்கள் EV தயாரிப்பாளரை ஒரு AI மற்றும் ரோபாட்டிக்ஸ் ஜாம்பவானாக மாற்றும் அவரது தொலைநோக்கு பார்வையை ஆதரித்தனர்.
இதர சொத்துகள்:
அவரது செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப் நிறுவனமான xAI, 230 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 15 பில்லியன் டாலர் புதிய பங்குகளை திரட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடு, கார் மற்றும் தோட்டம் போன்ற நேரடி சொத்துகளாக இல்லாமல், எலான் மஸ்கின் பெரும்பாலான சொத்துகள் முன்னணி நிறுவனங்களின் பங்குகளாகவே உள்ளன. இதன் மூலம் பெரிய அளவில் வரி செலுத்துவதில் இருந்து அவர் விலக்கு பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.