உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா உக்ரைன் மீது தொடர் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆனாலும், அவற்றை அசராமல் முறியடித்து வருகிறது உக்ரைன். தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இரவு பகலாக தங்களை காத்து வருவதாகக் கூறும் உக்ரைன் பாதுகாப்புப் படை, ரஷ்ய ட்ரோன் தாக்குதல்களை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய தாக்குதலை அசராமல் முறியடித்துவரும் உக்ரைன்

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த 4 நாட்களாக உக்ரைன் மீது ட்ரோன் மழையை பொழிந்து வருகிறது ரஷ்யா. நேற்று முன்தினம் இரவில், உக்ரைன் மீது 479 ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்திய நிலையில், அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு முறியடித்துள்ளது உக்ரைன். இது குறித்த வீடியோவை தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது உக்ரைன் பாதுகாப்புப் படை.

ஒரே இரவில் கிவ்-வின் மீது தாக்குதல் நடத்த வந்த எதிரிகளின் 7 ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தலைநகரை காக்கும் வகையில் துல்லியமான தாக்குதல்களை நடத்தி எதிரிகளின் ஆயுதங்கள் வீழ்த்தப்பட்டதாகவும், தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பின் பணியை பாருங்கள் என்று குறிப்பிட்டு அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இதேபோல், ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்பான Buk-M3 SAM-ஐ, ஆளில்லா படை அமைப்பு மூலம் தாக்கி அழித்ததாக மற்றொரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ரஷ்யா நேற்றும் தாக்குதல் நடத்திய நிலையில், இரவு பகலாக தங்கள் போர் வீரர்கள் உக்ரைனை பாதுகாத்து வருவதாக்க் கூறி ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது உக்ரைன் பாதுகாப்புப் படை.

இப்படி, ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், வெற்றிகரமாக அதை எதிர்கொண்டு வருகிறது உக்ரைன். மறுபுறம் இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், இரு நாடுகளுமே தாக்குதல்களை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றன. அதோடு, ஒருவர் மேல் ஒருவர் குற்றம்சாட்டி வருவதால், 3 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் இந்த போர் முடிவுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.