இலவச கார் பார்க்கிங்கில் தனது 'பெரிய' காரை நிறுத்தியதற்காக இங்கிலாந்து பெண்ணுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


பார்க்கிங் என்பது நாட்டில் மிகப்பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. பல இடங்களில் காரையோ, பைக்கையோ பார்க் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். அந்த அளவுக்கு பார்க்கிங் பிரச்னை சில இடங்களில் பெரிதாக உருவெடுத்து விடும். அந்தவகையில்தான் இப்போது ஒரு பெண்ணிற்கு அவர் செய்த பார்க்கிங் பிரச்னை கொடுத்துள்ளது.  


இங்கிலாந்தில், ஒரு பெண், மிகப் பெரியதாக இருந்த தனது வாகனத்தை  இலவச கார் பார்க்கிங்கில் நிறுத்தியதால், அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.




இங்கிலாந்து ஹாம்ஷையரின் நெவார்க்கில் உள்ள பீக்கன் ஹில் ரீடெய்ல் பூங்காவைச் சேர்ந்தவர் ட்ரேசி கார்லிஸ்லே(57). இவரது கணவர் கிரஹாம்(61). இவர்கள் இருவரும் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி தங்களது காரை இலவச கார்ப்பார்க்கிங்கில் நிறுத்திச் சென்றுள்ளனர். திரும்பிவரும்போது அவர்கள் ரூ.10,000 அபராதத்தை பெற்றிருந்தனர். 


ட்ரேசி கார்லிஸ்லே கூறுகையில், தனது 4X4 நிசான் நவரா எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு பெரியதாக இருந்ததாகவும், இரண்டு பார்க்கிங்கிற்கு மேல் நிறுத்த வேண்டியிருந்தது என்றும் தெரிவித்தார். மற்ற கார்களின் கதவுகளைத் தாக்காமல் அவரும் அவரது கணவர் கிரஹாமும், வெளியேறும் வகையில் காரை நிறுத்தியதாக ட்ரேசி தெரிவிக்கிறார். 15 நிமிடங்களுக்குப் பிறகு தம்பதியினர் தங்கள் காருக்குத் திரும்பிய போது, அவர்களின் கண்ணாடியில் ஒரு அபராத டிக்கெட்டைக் கண்டுள்ளனர். 


இதுகுறித்து பேசிய ட்ரேசி “நான் ஒரு குறிப்பிட்ட வெள்ளைக்கோட்டில் காரை நிறுத்தவில்லை என்பதை மறுக்கவில்லை. ஆனால் அது கவனக்குறைவாக செய்யப்படவில்லை. நாங்கள் 5.3 மீட்டர் நீளமும் கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் அகலமும் கொண்ட நிசான் நவராவை வைத்துள்ளோம். அதனால் குறிப்பிட்ட அளவில் எங்களால் நிறுத்தமுடியவில்லை. அந்த நேரத்தில் என் காருக்கு சிராய்ப்பு ஏற்பட்டது. காரை விட்டு சரியாக வெளியேற முடியவில்லை. எனவே கதவை முழுமையாக திறக்க கூடுதல் இடம் தேவைப்பட்டது.




கார் பார்க்கிங் இடம் எவ்வளவு என எங்களுக்கு தெரியும். நாங்கள் எப்போதும் மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதில் விழிப்புடன் இருப்போம். ஒரு மூலையில் யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில் இரண்டு பார்க்கிங் ஏரியாவை ஒன்றாக இணைத்து பயன்படுத்துவோம். அப்போதுதான் அதன் நீளத்திற்கு தாராளமாக ஏறவும் இறங்கவும் முடியும்” எனத் தெரிவித்தார். 


மேலும், “இது எதுவும் எதையும் மாற்றும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. நான் அபராதத்தை செலுத்துவேன். ஏனென்றால் அவர்கள் எங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அது எங்கள் கடன் நிலை மற்றும் மற்ற அனைத்தையும் பாதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இனி நான் அந்த பார்க்கிங்கிற்கு செல்ல மாட்டேன். வேறு எங்கேயாவது நான் பார்க் செய்துகொள்வேன்” என்றார். 


ஒருவேளை ட்ரேசி மேல்முறையீடு செய்தால் அபராத தொகை ரூ. 6,056 ஆக குறைய வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.