அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் நாட்டவர் சிலர் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த செய்தி தன்னை நிலைகுலைய வைத்துவிட்டதாக அந்நாட்டு பிரதமர் கியர் ஸ்டார்மர் வேதனை தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் சிக்கிய வெளி நாட்டவர்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் இருந்து டேக் ஆஃப் ஆகும்போது, விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. அந்த விமானம், பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியில் விழுந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விமானத்தில் பயணம் செய்தவர்களில் குறைந்தது 179 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் பிரிட்டன் நாட்டவர் சிலர் இருந்துள்ளனர். ஆனால், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை.

பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் வேதனை:

இந்த நிலையில், இந்த செய்தி தன்னை நிலைகுலைய வைத்துவிட்டதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறுகையில், "பிரிட்டன் பிரஜைகளை ஏற்றிக்கொண்டு லண்டனுக்குச் சென்ற விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளான காட்சிகள் வெளியாகி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. நிலைமை குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது. இந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை நினைத்து வேதனை அடைகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

 

விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்தவர்களில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் ஒருவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவரது உடல்நிலை என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.