திங்களன்று, இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் லிஸ் டிரஸ், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கை தோற்கடித்து அடுத்த பிரிட்டன் பிரதமராக பதவியேற்றார். இதையடுத்து, பிரிட்டன் வேலை வாய்ப்பை ஏற்பாடு செய்து தரும் நிறுவனமான சிவி லைப்ரரி, சுனக்கை கலாய்த்து வைத்து விளம்பரம் செய்துள்ளது.
வேலை வாய்ப்பு தளமான சிவி லைப்ரரி, அவர்களின் புதிய விளம்பர பலகைகளில் சுனக்கை கேலி செய்தது. இங்கிலாந்தின் தெருக்களில் உள்ள மொபைல் விளம்பரப் பலகைகளில் ரிஷி சுனக்கின் புகைப்படம் காணப்பட்டது. அந்த விளம்பர பலகையில், "உங்களுக்கு வேலை கிடைக்கவில்லையா? அனைவருக்கும் நாங்கள் வேலைகளை வழங்குகிறோம். அதில், உங்களுக்கு ஏற்ற வேலைய தேடுங்க" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
42 வயதான சுனக், தோல்வியடைந்த உடனேயே, தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கன்சர்வேடிவ் கட்சி ஒரே குடும்பம் என்று நான் எப்போதும் கூறியுள்ளேன். புதிய பிரதமரான லிஸ் டிரஸின் பின்னால் நாம் இப்போது ஒன்றுபடுகிறோம். அவர் கடினமான காலங்களில் நாட்டை வழிநடத்துகிறார்" என்று பதிவு செய்துள்ளார்.
விளம்பரத்தை விமரிசித்து பலர் கருத்து வெளியிட்டுள்ளனர். "இழிவானது! புகைப்படம் யாருடையதாக இருந்தாலும், அது ரிஷி, லிஸ், போரிஸ், டோனி, மார்கரெட் மற்றும் என யாருடையதாக இருந்தாலும் சரி. உங்கள் பிள்ளைக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கவில்லை என்றால், நாங்கள் சிரிப்போமா?
அவர்கள் பொது வாழ்க்கையில் இருப்பதாலேயே, இது சரியா? அவருக்கு/அவளுக்கு கண்பார்வை குறைபாடு இருந்தால், அவரைத் தவிர வேறு யாரையாவது அடையாளம் காட்டினால், அதே கருத்துடன் அவர்களின் முகத்தை விளம்பரத்தில் காண்பிப்பீர்களா? எனக்கு புரியவில்லை!!! பைத்தியக்காரத்தனமான உலகம். அன்புடன் நடந்து கொள்ளுங்கள். எனது கருத்து அரசியல் தொடர்பான ஒன்றும் இல்லை" என நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவி லைப்ரரி, ஒரு அரசியல் தலைவரை கேலி செய்து விளம்பரம் வெளியிடுவது இது முதல் முறையல்ல. முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் இந்நிறுவனத்தின் விளம்பர உத்தியால் பாதிக்கப்பட்டுள்ளார். ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலகியதும் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில், 'இன்று ராஜினாமா செய்துள்ளீர்களா? உங்களுக்கு ஏற்ற புதிய வேலையைத் தேடுங்கள்' என விளம்பரம் வெளியிட்டது.