சர்வதேச விண்வெளி மையத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்த ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த, ஆராய்ச்சியாளர் சுல்தான் அல் நேயடி பாதுகாப்பாக பூமி திரும்பியுள்ளார்.


சுல்தான் அல் நேயடி:


கடந்த 186 நாட்களாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்த, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த சுல்தான் அல் நேயடி பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தில் நாசா ஆராய்ச்சியாளர்கள் உட்பட 6 பேர், 17 மணி நேரம் பயணித்து ஃபுளோரிடாவில் உள்ள கடற்கரை பகுதியில் தரையிறங்கினர். பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப அவரது உடல் மீண்டும் செயல்பட சில மணி நேரங்கள் ஆகும் என்பதால், அவர்கள் ஸ்ட்ரக்‌ஷரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தேவையான  மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சிகிச்சை முடிந்து 2 வாரங்களுக்குப் பிறகு இயல்பு வாழ்கைக்கு திரும்புவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   


அமீரகத்தின் சாதனை மனிதர்:


சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்று 6 மாத காலம் ஆய்வு செய்யும் திட்டத்திற்கு, கடந்த ஆண்டு ஜுலை மாதம் 25ம் தேதி சுல்தான் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, ஐக்கிய அவருக்கு பல்வேறு பரிசோதனைகளுடன், விண்வெளியில் தங்குவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து,  ஃபால்கன் 9 ராக்கெட்டின் மூலம் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கான பயணத்தை சுல்தான் தொடங்கினார். மறுநாள் சர்வதேச விண்வெளி மையத்த அடைந்த அவர், ஏப்ரல் 28ம் தேதி விண்வெளிக்கு சென்று, ஸ்பேஸ் வால்க் செய்த அமீரகத்தை சேர்ந்த முதல் நபர் என்ற சாதனையை படைத்தார். ஏற்கனவே, ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஹஸ்ஸா அல் மன்சூரி 8 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருந்தார். விண்வெளியில் நடந்தது, நீண்ட நாட்கள் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட அடிப்படையில், சுல்தான் முக்கியத்துவம் பெற்றுள்ளார். 






4,400 மணி நேரங்கள்:


விண்வெளியில் 200-க்கும் மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்ட சுல்தான், 4,400 மணிக்கும் அதிகமான நேரத்த அவர் விண்வெளியில் செலவழித்துள்ளார். இதன் மூலம், விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்த அரேபியர் என்ற பெருமையையும் சுல்தான் படைத்துள்ளார். விண்வெளியில் இருந்தவாறு, பல்வேறு புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். விண்வெளியில் இருக்கும் நபர்கள் எப்படி தண்ணீர் அருந்துவார்கள், எப்படி உணவு தயாரித்து சாப்பிடுவார்கள் என்பது போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளார். விண்வெளியில் இருந்து பூமி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். துபாய் ஆட்சியாளர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல்  மக்தூம் எழுதிய, "The  journey from the desert to the stars" என்ற புத்தகத்தை வெளியிட்டு, விண்வெளியில் புத்தகத்தை வெளியிட்ட முதல் நபர் என்ற பெருமையையும் சுல்தான் பெற்றுள்ளார்.


குவியும் பாராட்டு:


இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “விண்வெளி ஆய்வில் பெரும் முன்னேற்றங்களை அடைந்ததற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்கள் உங்களையும் ஒட்டுமொத்த குழுவையும் நினைத்து பெருமிதம் கொள்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.