உலகப் பொருளாதாரத்தில் 85 சதவிகிதம் அளவிற்கு பங்கீட்டை கொண்டுள்ள, 20 நாடுகள் அடங்கிய ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையடுத்து கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் சுமார் 200 கூட்டங்கள் நடைபெற்றன. அதில், ஜி20 நாடுகளை சேர்ந்த பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்றனர். அதைதொடர்ந்து, ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது.


பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள டெல்லி உச்சி மாநாடு:


டெல்லியில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இவர்களோடு, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜெர்மனி, இத்தாலி ஜப்பான், துருக்கி, தென்னாப்ரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா மற்றும் இத்தாலி என மொத்தம் 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதனையொட்டி டெல்லியில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாடு உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள நிலையில், சீன அதிபர் ஷி ஜின்பிங், அதை புறக்கணிக்க உள்ளதாக தகவல் வெளியான வண்ணம்  உள்ளது. இந்த நிலையில், டெல்லி உச்சி மாநாட்டை சீன அதிபர் புறக்கணிக்க திட்டமிட்டு வருவதாக வெளியாகி வரும் செய்திகள் தனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.


புறக்கணிக்கிறாரா சீன அதிபர்?


டெலாவேர் மாகாணத்தில் உள்ள ரெஹோபோத் கடற்கரையில் செய்தியாளர்களை சந்தித்த பைடன் இதுகுறித்து பேசுகையில், "நான் ஏமாற்றமடைந்துள்ளேன். ஆனால், நான் அவரைப் பார்க்கத்தான் போகிறேன்" என்றார்.


சீன அதிபரை சந்திக்கும் இடத்தை பற்றி பைடன் குறிப்பிடவில்லை. சீன அதிபர் டெல்லிக்கு செல்லவில்லை என்றால், நவம்பரில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற உள்ள ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில், ஷி ஜின்பிங்கை பைடன் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டை ஷி ஜின்பிங் புறக்கணிக்கும் பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் சிக்கல் உண்டாகும் என புவிசார் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.


அமெரிக்க - சீன உறவு:


சீன அதிபருக்கு பதிலாக டெல்லி உச்சி மாநாட்டில் அந்நாட்டு பிரதமர் லி கியாங் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சீனா சார்பில் உச்ச மாநாட்டில் கலந்து கொள்வது யார் என்பது இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் சீன அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கடந்த நவம்பர் மாதம், இந்தோனேசியா பாலியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் கடைசியாக பேசினர். இதற்கிடையே, சீன உளவு பலூன் விவகாரம் அமெரிக்க, சீன நாட்டு உறவிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.


தைவான் தொடங்கி பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் அடிப்படை கருத்து வேறுபாடுகள் உள்ளன. அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைவானுக்கு சென்றது, தைவான் அதிபர் அமெரிக்காவுக்கு சென்றது, செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்ய அமெரிக்க தடை விதித்தது, கியூபாவில் இருந்து அமெரிக்காவை சீன கண்காணித்து வருவதாக வெளியாகி வரும் செய்திகள் ஆகியவை இரு நாட்டு பிரச்னையில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.