எலான் மஸ்கைப் புகழ்ந்த டொனால்டு டிரம்ப், மீண்டும் ட்விட்டரில் சேர விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், பில்லியனருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியதில் இருந்து தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறார். கடந்த அக்டோபர் 27ஆம் தேதி உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது தொடங்கி தினம் ஒரு பிரச்சினை, குழப்பம் எனத் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ப்ளூ டிக்குக்கு கட்டணம் வசூல் செய்வதாக அறிவித்தது, ட்விட்டர் ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தது உள்ளிட்ட பல காரணங்களால் அதிருப்தியில் இருந்த பல பயனர்கள் முன்னதாக மாஸ்டடோன், கூ உள்ளிட்ட பிற மைக்ரோ ப்ளாகிங் தளங்கள், சமூக வலைதள செயலிகளுக்கு மாறி வந்தனர். 8 டாலர்கள் வரை செலுத்தி எவரும் வெரிஃபைட் அக்கவுண்ட் பெறலாம் எனும் திட்டம் அறிவிப்பட்ட நிலையில், அதன்படி இந்தியாவில் ப்ளூ டிக் வாங்குவதற்கு மாதம் ரூ.719 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வரும் நவம்பர் 29-ஆம் தேதி இந்த ப்ளூ டிக் பெறும் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் இம்முறை இத்திட்டம் மேலும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்றும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியுள்ளது ஒரு சாரரை அதிருப்தியில் ஆழ்த்தியிருந்தாலும், மற்றொரு தரப்பினர் அவருக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தும் மகிழ்ச்சி தெரிவித்தும் வருகின்றனர்.
டிரம்பின் ட்விட்டர்
அமெரிக்காவில் கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் டொனால்டு டிரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயக கட்சி சார்பில் போட்யிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். அப்போது ஜோ பைடனுக்கு எதிராக டிரம்பின் ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இதற்கிடையில் அமெரிக்காவின் பல பகுதிகளில் டிரம்பின் ஆதரவாளர்கள் போராட்டங்கள் நடத்தினர். அந்த போராட்டங்களின் போது சமூக வலைதளத்தில் கலவரத்தை தூண்டும் வகையிலும், அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி ட்விட்டர் நிறுவனம் சுமார் 8 கோடி பேரால் பின்தொடரப்பட்டு வந்த டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியது. இதை அடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவைகளுக்கு போட்டியாக டொனால்டு டிரம்ப் புதிதாக 'Truth' என்னும் புதிய சமூக வலைதள செயலியை அறிமுகப்படுத்தினார். அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்பை மீண்டும் ட்விட்டரில் சேர்ப்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தினார்.
இதில், 51.8 சதவீதம் பேர், டிரம்ப் மீண்டும் ட்விட்டருக்கு வரவேண்டும் என அவருக்கு ஆதரவாகப் பதில் அளித்துள்ளனர். மேலும் 48.2 சதவீதம் பேர் டிரம்பை ட்விட்டரில் சேர்க்க எதிர்த்து கூறி வாக்களித்தனர். இதனை அடுத்து டொனால்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கின் தடையை எலான் மஸ்க் நீக்கினார்.
"மீண்டும் சேரும் எண்ணமில்லை”
இதுகுறித்து டிரம்ப் கூறியதாவது, " தற்போது 'Truth' என்னும் செயலியை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், மீண்டும் ட்விட்டருக்கு திரும்ப வரப்போவதில்லை என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் என்னவென்று அவர் கூறவில்லை. தனது டிரம்ப் மீடியா மற்றும் டெக்னாலஜி குழுவின் ட்ரூத் சோஷியல் தளத்துடன் தொடர்ந்து நீடிக்கப்போவதாகவும், இந்த செயலி அற்புதமாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பின்பு எலான் மஸ்க் ட்விட்டரில் மீண்டும் தன்னை இணைத்தற்கு பாராட்டு தெரிவித்தார்.