அமெரிக்காவில் உபெர் கார் புக் செய்து சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஒருவர் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.


மிச்சிகன் மாகாணத்தில் உள்ள சவுத்ஃபீல்டைச் சேர்ந்த நபர் ஜேசன் கிறிஸ்மஸ். இவர் முன்னதாக தன் நாட்டைச் சேர்ந்த ஹண்டிங்டன் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.


ஆனால் மாட்டிக்கொள்ளாமல் திருட்டில் ஈடுபடுவதற்காக மாஸ்டர் திட்டம் தீட்டிய ஜேசன் கிறிஸ்மஸ், இறுதியாக உபெர் வண்டி புக் செய்து அதில் சென்று கொள்ளையடித்துவிட்டு மீண்டும் திரும்பலாம் என முடிவு செய்துள்ளார்.


அதன்படி, உபெர் கார் புக் செய்து வங்கியை அடைந்த ஜேசன், கார் ஓட்டுநரை வங்கிக்கு வெளியே காத்திருக்கும்படி கோரியுள்ளார். தொடர்ந்து வண்டியில் இருந்து இறங்கிய உடன் முகமூடி அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு வங்கிக் கட்டடத்துக்குள்  நுழைந்துள்ளார். தொடர்ந்து துப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளையடித்துவிட்டு மீண்டும் வெளியே காத்திருந்த காரில் ஏறி திரும்பியுள்ளார்.


அதனைத் தொடர்ந்து உடனடியாக அலாரம் எழுப்பப்பட்ட பிறகு, வங்கி பாதுகாவலர்கள் விரைந்து காவல் துறையினரை அணுகியுள்ளனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு ஓட்டுநரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில்,  தனக்கு கொள்ளை சம்பவம் பற்றி எதுவும் தெரியாது என ஓட்டுநர் தெளிவுபடுத்தியுள்ளார்.


இதனையடுத்து உபெர் ஓட்டுநரின் உதவியுடன் ஜேசன் கிறிஸ்மஸின் வீட்டு முகவரியை கண்டறிந்து அங்கு விரைந்து சென்று காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர்.


இந்நிலையில், முன்னதாக தனியார் ஊடகத்திடம் முன்னதாக இச்சம்பவம் குறித்துப் பேசிய காவலர் எல்வின் பாரேன், ”42 வயது நிரம்பிய ஜேசன் கிறிஸ்மஸ் எதற்காக இச்சம்பவத்தில் ஈடுபட்டார் எனத் தெரியவில்லை. ஆனால் அமெரிக்காவில் விடுமுறை காலம் நெருங்கும் வேளைகளில் மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.


முந்தைய சம்பவம்


இதேபோல் முன்னதாக உத்தரப் பிரதேசம், லக்னோவில் 150 பெட்டிகளில் இருந்த கேட்பரி சாக்லேட் கொள்ளைபோன வித்தியாசமான திருட்டு சம்பவம் நிகழ்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம், லக்னோவில் உள்ள சாக்லேட் குடோனில் இருந்து சி.சி,டி.வி. கேமராக்களை அகற்றிவிட்டு அங்கிருந்த சாக்லேட்களை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர். 


இந்நிலையில், கேட்பரி சாக்லேட் விநியோகஸ்தர் ராஜேந்திர சிங் சித்து சாக்லேட் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து காவல் துறையில் புகார் அளித்தார். சாக்லேட் குடோனில் இருந்து சிசி.டி.வி. கேமராவையும் கொள்ளையர்கள் நீக்கிய நிலையில், இந்த வழக்கு சவால் மிகுந்ததாக உள்ளதாக முன்னதாகக் காவல் துறையினர் தெரிவித்திருந்தனர்.


லக்னோவில் உள்ள குடோனில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட இந்த சாக்லேட்டின் மதிப்பு ரூ.17 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.