துருக்கியில், இஸ்தான்புல் மேயர் இக்ரம் இமாமொக்லு கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த வாரம் புதன்கிழமை முதல், அதாவது அவர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து, அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அதை கட்டுப்படுத்தும் வகையில், போலீசார், போராட்டர்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து, கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, ரப்பர் குண்டுகளால் சுட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இஸ்தான்புல் மேயர்

கடந்த 2014-ம் ஆண்டு முதல், துருக்கியின் அதிபராக நீதி மற்றும் முன்னேற்றக் கட்சியின் தலைவர் ரிசெப் தயிப் எர்டோகன் இருந்து வருகிறார். துருக்கியில் வரும் 2028-ம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், துருக்கியின் முக்கிய எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் தலைவரும், நாட்டின் முக்கிய பெரிய நகரங்களில் ஒன்றான இஸ்தான்புல் மேயருமான இக்ரம் இமாமொக்லு, 2028 அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதே நாளில், ஊழல் குற்றச்சாட்டில், இமாமொக்லு, அவரது உதவியாளர் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர். இமாமொக்லு அதிபர் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க இந்த நடவடிக்கையை ஆளும் அரசு எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்றுவரும் போராட்டம்

இந்த சூழலில், இமாமொக்லு கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் இஸ்தான்புல்லில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில், நேற்று இரவு போராட்டக்காரர்களை அப்புறப்படுத்துவதற்காக, போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளனர். அதோடு, தண்ணீரையும் பீய்ச்சி அடித்துள்ளனர். அதில் ஒருவர் பறந்து கீழே விழுந்து காயமடையும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையே, எதிர்க்கட்சித் தலைவர் ஒஸ்குர் ஒஸல் தலைமையில், பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, அதிபருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக, செய்தியாளர்கள் உள்பட 1,100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரமாண்டமாக நடைபெறும் போராட்டங்கள் குறித்த செய்திகள் வெளியாவதை தடுக்கவே பத்திரிகையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்டோரின் கணக்குகளை முடக்கவும் எக்ஸ் தளத்திடம் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.