நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பால் 45 ஆயிரம் மக்களை இழந்த துருக்கி மற்றும் சிரியா எல்லைக்குட்பட்ட பகுதியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். 


துருக்கி-சிரியா நிலநடுக்கம்:


கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி  துருக்கி- சிரியா எல்லைப்பகுதியான காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில் 4.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை  சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள்  சரிந்து விழுந்து தரைமட்டமாகின. 


அதிகாலை நேரம் என்பதால் மக்கள் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், இந்த கட்டிட இடிபாடுகளில் பலரும் சிக்கிக்கொண்டனர். அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஐந்து முறை ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பேரழிவில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 45 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் இந்த பாதிப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. மக்கள் பலரும் வீடுகளை இழந்தனர். 


அடுத்தடுத்து புதிய நிலநடுக்கம்


ஒரு வழியாக 2 வார கால மீட்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், துருக்கி மற்றும் சிரியாவில் நேற்று இரவு 8.04 மணிக்கு மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையத்தின் தகவல்படி, ஹடாய் மாகாணத்திற்கு தெற்குப் பகுதியில்  துருக்கி-சிரியா எல்லைப் பகுதியான அனடோலுவில் தான் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில்  6.4 என பதிவாகியுள்ளது. 


இதேபோல் 2வது நிலநடுக்கம் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். முன்னெச்சரிக்கையாக கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்குமாறு  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஏற்கனவே சேதமடைந்த கட்டிடங்களில் தஞ்சம் புகுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 


இந்நிலையில் இந்த இரண்டு நிலநடுக்கங்களில் 3 பேர் பலியானதாகவும்,  213 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது என துருக்கி உள்துறை அமைச்சகம் தெரிவித்ததாக உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.