துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(06/02/2023) தெரிவித்தார்.



மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "துருக்கியைத் தாக்கிய அழிவுகரமான நிலநடுக்கத்தை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பலரின் இறப்புகள் மற்றும் சேதங்கள் பற்றிய செய்திகள் வந்தவாறு உள்ளன. துருக்கிக்கு அருகிலுள்ள நாடுகளில் கூட சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகின்றன. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது. 




துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டாகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் திங்களன்று (பிப்ரவரி, 6) ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில், துருக்கியில் ஏழு மாகாணங்களில் குறைந்தது 76 பேரும், சிரியாவில் 42 பேரும் உயிரிழந்ததாக முதல்கட்ட அறிக்கைகள் வெளியானது. ஆனால் மீட்புபணிகளின் மூலம் தற்போது இரு நாடுகளிலும் 1,300 பேர் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ட்விட்டரில் பதிவிட்டு, துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளையும் உலுக்கிய சோகமான நிலநடுக்கத்தில் உயிர் இழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்தார். 




அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ட்விட்டரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடு நன்றாக சமாளிக்க துருக்கிக்கு சரியான நேரத்தில் உதவி செய்வதாக உறுதியளித்தார்.




அவர் தனது ட்வீட்டில் , "இன்றைய துர்க்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட அழிவுகரமான நிலநடுக்கத்தால் அமெரிக்கா ஆழ்ந்த கவலையில் உள்ளது. தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவிக்க துருக்கி அதிகாரிகளுடன் நான் தொடர்பு கொண்டுள்ளேன். நாங்கள் ஒருங்கிணைந்து நிலைமையை தொடர்ந்து கண்காணிப்போம்." நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல பின் அதிர்வுகள் ஏற்பட்டன. இந்நிலையில் மாலை 4 மணி அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவாகியுள்ளது. 


அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் மீட்புப் பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது. உறவினர்களை இழந்த துருக்கி, சிரியா பொதுமக்கள் பொரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.