ஜப்பானைத் தொடர்ந்து ரஷ்யாவிலும் நிலநடுக்கம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல போஸ்னியா ஹெர்சகோவினா பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆகப் பதிவாகி உள்ளது.


ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவுகோலில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தென் கொரியாவுக்கும் நிலநடுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதேபோல கேங்வான் மாகாணத்தில் உள்ள மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.


பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, இஷிகாவாவில் உள்ள வாஜிமா நகரத்தில் 1.2 மீட்டர் உயரத்தில் சுனாமி அலை வந்தது.


கடல் கொந்தளிப்பு


ஆனால், அதே பகுதியில் உள்ள நோட்டோ நகரில் ஐந்து மீட்டருக்கும் உயரமான சுனாமி வரும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடுமையான சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மேற்கு ஜப்பான் பகுதிகளில் இருக்கும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 


 






முன்னதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா மற்றும் டோயாமா மாகாணங்களின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. சுனாமியும் ஏற்பட்டது. தலைநகர் டோக்கியோவிலும், கான்டோ பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. 


வ்ளாடிவோஸ்டோக், நகோட்கா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை


ரஷ்யாவின் கிழக்கு நகரங்களாக வ்ளாடிவோஸ்டோக் மற்றும் நகோட்கா பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பொது மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று க்ரெம்ளின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.  


ஜப்பான் நாட்டில் அடுத்தடுத்து 21 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அவை அனைத்தும் ரிக்டர் அளவுகோலில் 4-க்கும் அதிகமாக பதிவாகி இருந்தன.


ஏற்கெனவே ஜப்பானில் உள்ள இஸூ தீவில் கடந்த அக்டோபர் மாதம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது.