உக்ரைன் மீது ரஷ்யா நேற்று இதுவரை இல்லாத அளவிற்கு பயங்கர தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைனை முழுவதுமாக அடைய நினைத்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப், புதினை எச்சரித்துள்ளார். அதோடு, புதினையும் மோசமாக விமர்சித்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
பேச்சுவார்த்தையால் நிறுத்த முடியாத ரஷ்யா - உக்ரைன் போர்
உக்ரைன் நேட்டோவில் இணைவதை எதிர்த்த ரஷ்யா, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் தாக்குப்பிடித்து போராடி வருகிறது. இந்நிலையில், இந்த போரை நிறுத்த நடத்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளன.
ஏற்கனவே, ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த ட்ரம்ப் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இரு நாட்டு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சிறப்பு தூதராக ஸ்டீவ் விட்காஃபை நியமித்து, அவரும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் பிரதிநிதிகளுடன் நடத்தினார். எனினும், அவை எல்லாம் தோல்வியிலேயே முடிவடைந்தன. இதனிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் நேரடியாகவும் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், அதுவும் தோல்வியிலேயே முடிவடைந்தது.
உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்திய ரஷ்யா
இப்படிப்பட்ட சூழலில், ரஷ்யா நேற்று உக்ரைன் மீது, 266 ட்ரோன்களை ஏவியும், 45 ஏவுகணைகளைக் கொண்டும் மிகப்பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது. இந்த தாக்கதலில் 13 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடங்கியதிலிருந்து இதுவே மிகப்பெரிய தாக்குதலாகும்.
ட்ரம்ப் கண்டனம் - புதின் மீது விமர்சனம்
இந்த நிலையில், ரஷ்யா உக்ரைன் மீது நடத்திய மிகப்பெரிய தாக்குதலுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு, ரஷ்யாவின் அதிபர் புதினையும் அவர் கடுமையாக விமர்சித்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ரஷ்ய அதிபர் புதினுடன் தான் நல்ல உறவில் இருந்து வருவதாகவும், ஆனால் அவருக்கு ஏதோ ஆகிவிட்டது என குறிப்பிட்டுள்ளார். புதின் பைத்தியம்போல் மாறிவிட்டதாகவும், அவசியம் இல்லாமல் ஏராளமான பொதுமக்களை அவர் கொன்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தான் படைவீரர்கள் பற்றி மட்டும் பேசவில்லை என்றும், காரணமே இல்லாமல் உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், புதின் உக்ரைனின் ஒரு பகுதியை மட்டும் விரும்பவில்லை, ஒட்டுமொத்த உக்ரைனையும் அடைய விரும்புகிறார் என்று தான் ஏற்கனவே கூறிவருவதாகவும், அது இப்போது சரி என்பதுபோல்தான் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்படி உக்ரைனை முழுவதுமாக புதின் அடைய நினைத்தால், அது ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.