இஸ்ரேல்-மற்றும் ஈரான் ஒருபுறம் பயங்கரமாக தாக்குதல்களை தொடுத்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில், ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று கூறியுள்ள அவர், அந்நாட்டின் உச்ச தலைவர் குறித்தும் மிரட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் மிரட்டல் பதிவு என்ன.?
கனடாவில் நடைபெற்றுவரும் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற ட்ரம்ப், அங்கிருந்து பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டார். அதோடு, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன் அறையில் காத்திருக்குமாறு கூறிவிட்டுச் சென்றார். இதையடுத்து, அமெரிக்கா ஈரானை தாக்கப் போகிறதா என்ற சந்தேகம் உலகம் முழுக்கவே எழுந்தது.
இந்நிலையில், அமெரிக்கா திரும்பிய ட்ரம்ப், தனது சமூக வலைதள பக்கத்தில் வரிசையாக பதிவுகளை போட்டுள்ளார். அதில், ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும் என்று கூறியுள்ளார்.
அவர் எங்களுக்கு எளிதான இலக்கு, ஆனால் அங்கு அவர் பத்திரமாக இருக்கிறார். அவரை நாங்கள் வெளியே கொண்டுவரப் போவதில்லை(கொலை), குறைந்தது இப்போதைக்கு இல்லை என, மிரட்டல் தொனியில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். ஆனால், அமெரிக்க மக்களோ, படைவீரர்களோ ஏவுகணைகளால் தாக்கப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்துகொண்டே வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக பேசிய அவர், இஸ்ரேல்-ஈரான் இடையே வெறும் போர் நிறுத்தத்தை மட்டும் தான் விரும்பவில்லை எனவும், அதற்கும் மேலான ஒன்றை எதிர்பார்ப்பதர்கவும், ஒரு நிரந்தர தீர்வையே விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.
“நிபந்தனையற்று சரணடைய வேண்டும்“
ட்ரம்ப் போட்டுள்ள மற்றொரு பதிவில், வேறு எதுவுமே கூறாமல் ''UNCONDITIONAL SURRENDER'' என்று மட்டுமே பதிவிட்டுள்ளார். இது, ஈரான் எந்த நிபந்தனையும் விதிக்காமல் சரணடைய வேண்டும் என்பதைத் தான் குறிக்கிறது. அப்படி ஈரான் தவறும் பட்சத்தில், அமெரிக்கா அவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்று கருதப்படுகிறது.
“ஈரானின் வான்வெளி எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது“
இதேபோல், மற்றொரு பதிவில், ஈரானின் வான்வெளி மொத்தமும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானிடம் நல்ல வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏராளமாக உள்ளன, ஆனால், அமெரிக்க தயாரிப்புகளுடன் அதை ஒப்பிட முடியாது, அமெரிக்காவை விட சிறந்ததை யாராலும் கொடுக்க முடியாது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, ஜி7 உச்சிமாநாட்டிலிருந்து ட்ரம்ப் பாதியில் கிளம்பியபோதே, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்த பதிவுகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதன் மூலம், அமெரிக்கா ஈரானை நிச்சயம் தாக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தற்போது என்ன செய்யப் போகிறது என்று உலக நாடுகள் உற்றுநோக்கியுள்ளன. ஏற்கனவே, ட்ரம்ப் விடுத்த பல மிரட்டல்களுக்கு ஈரான் அசரவில்லை. ஆனால், இந்த முறை ட்ரம்ப் பொறுமையை இழந்து வருவதாக தெரிவித்துள்ளதால், ஈரான் என்ன செய்யப் போகிறது என்பதே கேள்வி...