அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஈரானுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா எந்த வகையிலாவது தாக்கப்பட்டால், அது "இதற்கு முன் கண்டிராத அளவில்" தனது இராணுவ வலிமையை கட்டவிழ்த்துவிடும் என்று எச்சரித்துள்ளார்.
ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன.?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்ததன் விளைவாக, ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் நடத்தப்பட்ட ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதல்களின் பின்னணியில் அமெரிக்கா இல்லை என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், இந்த அறிக்கை வந்துள்ளது.
தனது ட்ரூத் சோஷியலில் ட்ரம்ப் போட்டுள்ள பதிவில், காமெனி தலைமையிலான இஸ்லாமிய குடியரசிற்கு ஒரு நேரடி செய்தியை விடுத்துள்ளார். அதில், "ஈரான் மீதான தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈரானால் எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் அமெரிக்கா தாக்கப்பட்டால், அதன் ஆயுதப்படைகளின் முழு பலமும், இதற்கு முன் கண்டிராத அளவில் உங்கள் மீது இறங்கும் என எச்சரித்துள்ளார். இருந்தாலும், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எளிதாகச் செய்து, இந்த ரத்தக்களரி மோதலை முடிவுக்குக் கொண்டுவர முடியும்“ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து நிலைப்பாடுகளை மாற்றிவரும் ட்ரம்ப்
இது ஒருபுறமிருந்தாலும், இஸ்ரேலின் ஆபரேஷன் ரைசிங் லயன் குறித்த டிரம்பின் நிலைப்பாடு கடந்த சில நாட்களாக பல முறை மாறிவிட்டது. இஸ்ரேலிய தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர் தெஹ்ரானுடன் ஒரு ராஜதந்திர தீர்வுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் முடிவடைந்த பின்னர், இஸ்ரேலை பாராட்டிய அவர், ஈரானை எச்சரித்தார். அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஈரான் உடனடியாக ஒப்புக்கொள்ள வேண்டும், இல்லை என்றால், இதைவிட பயங்கரமான தாக்குதல் நடக்கும் என கூறினார்.
அது குறித்த பதிவில், "இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஈரானுக்கு 'ஒரு ஒப்பந்தம் செய்ய' 60 நாள் இறுதி எச்சரிக்கை கொடுத்தேன்," என்று டிரம்ப் தெரிவித்திருந்தார். மேலும், "இன்று 61-வது நாள். நான் அவர்களிடம் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னேன், ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. இப்போது அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றும் கூறியிருந்தார்.
பதற்றத்தைத் தணிப்பதற்கான இறுதி வேண்டுகோளையும் அவர் விடுத்திருந்தார். "ஏற்கனவே பெரும் உயிரிழப்புகளும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன, ஆனால் இந்தப் படுகொலையை முடிவுக்குக் கொண்டுவர இப்போதும் நேரம் இருக்கிறது. எதுவும் மிச்சமில்லாமல் போவதற்கு முன், ஈரான் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.
ஈரானின் எச்சரிக்கை
ட்ரம்ப்பின் வலியுறுத்தலை புறந்தள்ளிய ஈரான், இஸ்ரேலுக்கு பின்புலமாக அமெரிக்கா இருப்பதாக குற்றம்சாட்டி, அவர்களுக்கு உதவினால், உங்கள் பிராந்திய நிலைகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்காவிற்கும், அதோடு இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில்தான், தற்போது அற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதனால், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.