காசா குறித்து தொடர்ந்து பேசிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் சர்ச்சையான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர் அப்படி என்ன பேசினார் என்பதை தற்போது பார்க்கலாம்.
காசாவை குறி வைத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்காவின் அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதிலிருந்து, பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் டொனால்ட் ட்ரம்ப், அதிகமாக பேசிவருவது காசாவை பற்றிதான். போர் சூழலை பயன்படுத்தி காசாவை எப்படியாவது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்று அவர் திட்டமிட்டு வருவதுபோல் அவரது பேச்சுக்கள் இருக்கின்றன. இந்த நிலையில், நேற்று ஹமாஸ் அமைப்பிற்கு கெடு விதித்துள்ள அவர், மீண்டும் காசா குறித்த ஒரு சர்ச்சையான கருத்தை தெரிவித்துள்ளார்.
ஜோர்டான் மன்னரிடம் காசா குறித்து ட்ரம்ப் சர்ச்சை கருத்து
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதிலிருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் அவரை சந்தித்து பேசி வருகின்றனர். அந்த வகையில், அமெரிக்கா சென்ற ஜோர்டான் மன்னர் அப்துல்லா, வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் காசா குறித்து பேசிய ட்ரம்ப், அங்கே வாங்குவதற்கு எதுவும் இல்லை, அது போரினால் சிதைந்த பகுதி, அதை விலை கொடுத்தெல்லாம் வாங்க வேண்டியதில்லை, அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று தெரிவித்துள்ளார். மேலும், காசாவை மறுகட்டமைப்பு செய்வதால், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த பேச்சு, அவர் காசா மீது குறி வைத்துள்ளதை அப்பட்டமாக காட்டுவதாக உள்ளது. ஏற்கனவே காசாவை கைப்பற்றப்போவதாக அவர் பேசியபோது, அவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என வெள்ளை மாளிகை விளக்கமளித்தது. தற்போது, இந்த கருத்துக்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறது என்பது தெரியவில்லை.