அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஃபர்னிச்சர்கள் மீது புதிய வரிகளை விதிக்கப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். மேலும், அவரது நிர்வாகம் இந்தத் துறை குறித்து விசாரணையைத் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளார். இது குறித்து, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் ட்ரம்ப். அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை பார்க்கலாம்.
“ஃபர்னிச்சர்கள் மீது 50 நாட்களில் வரி விதிக்கப்படும்“
புதிய வரி விதிப்பு குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் வரும் மரச்சாமான்கள்(Furnitures) மீது ஒரு பெரிய கட்டண விசாரணையை மேற்கொள்கிறோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 50 நாட்களில் அந்த விசாரணை நிறைவுபெறும் என்றும் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்குள் வரும் மரச்சாமான்கள் மீது வரிகள் விதிக்கப்படும், ஆனால், எவ்வளவு வரி என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
இந்த நடவடிக்கை, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, மிச்சிகன் மற்றும் பல பகுதிகளில், ஃபர்னிச்சர் தொழிலை மீட்டெடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஃபர்னிச்சர்களின் வர்த்தகம் என்ன.?
அமெரிக்க அரசின் தரவுகளில், ஜூலை மாத நிலவரப்படி, ஃபர்னிச்சர் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உற்பத்தித் துறையில், அமெரிக்கா 3 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை பணியமர்த்தியுள்ளது. இது 2000 -மாவது ஆண்டில் காணப்பட்ட அளவை விட பாதி அளவு.
அமெரிக்க ஃபர்னிச்சர் இறக்குமதியின் முக்கிய ஆதாரங்களில் சீனாவும், வியட்நாமும் அடங்கும். வர்த்தக வெளியீடான ஃபர்னிச்சர் டுடே படி, அமெரிக்கா 2024 ஆம் ஆண்டில் 25.5 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஃபர்னிச்சர்களை இறக்குமதி செய்தது.
இந்த ஆண்டு எஃகு, அலுமினியம், ஆட்டோமொபைல்கள் மற்றும் பிற பொருட்களின் இறக்குமதிக்கு அதிக வரிகளை விதித்த பின்னர், குறிப்பிட்ட துறைகளை குறிவைத்து டிரம்ப் மேற்கொண்ட சமீபத்திய அச்சுறுத்தல் நடவடிக்கையாகும்.
பல்வேறு பொருட்களின் இறக்குமதி குறித்து ட்ரம்ப் நிர்வாகம் விசாரணை
தேசிய பாதுகாப்பில் அவற்றின் விளைவுகளை கருத்தில் கொண்டு, மருந்துகள், சில்லுகள், முக்கியமான தாதுக்கள் மற்றும் பல்வேறு வகைப் பொருட்களின் இறக்குமதி குறித்து டிரம்ப் நிர்வாகம் பல விசாரணைகளை தொடங்கியுள்ளது. பொதுவாக, இதுபோன்ற ஆய்வுகள் முடிவடைய பல மாதங்கள் ஆகும். மேலும், அவை இறுதியில் புதிய கட்டணங்களை விதிப்பதை நியாயப்படுத்தக்கூடும்.
வியட்நாம் மற்றும் சீனா போன்ற பொருளாதாரங்கள் ஏற்கனவே நாடு தழுவிய வரிகளின் தனித்தனி அலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட துறைகள் தனித்தனி விகிதங்களின் கீழ் வருகின்றன. இந்த நாடு சார்ந்த வரிகளில் சில சட்ட சவால்களை எதிர்கொள்கின்றன.
இருப்பினும், விசாரணைகளுக்குப் பிறகு விதிக்கப்படும் துறைசார் கட்டணங்கள் பொதுவாக உறுதியான சட்ட அடிப்படையில் இருப்பதாகக் காணப்படுகிறது.