அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், அவர் எதற்குமே ஒத்துவரவில்லை, இதனால் விரக்தியடைந்த ட்ரம்ப், புதினை விமர்சித்துள்ளார். அதற்காகத்தான், அவர் நன்றாகத்தான் பேசுகிறார், ஆனால் மாலையில் அனைவர் மீதும் குண்டுகளை வீசிவிடுகிறார் என தெரிவித்துள்ளார். ட்ரம்ப் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Continues below advertisement

உக்ரைனுக்கு ஆயுதங்கள்.. ரஷ்யாவிற்கு பொருளாதார தடைகள்

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அனுப்ப உள்ளதாக தெரிவித்ததோடு, ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் குறித்து அதிருப்தி தெரிவித்த ட்ரம்ப், இன்று ரஷ்யா குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறியுள்ளார்.

இன்று, அமெரிக்க பிரதிநிதிகள் உக்ரைன் செல்லும் நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேட்டோ செயலாளர் ஜெனரல் மார்க் ருத்தேவை சந்திக்க உள்ளார். கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், பல முறை நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியிலேயே முடிந்துள்ளன.

Continues below advertisement

இதனால், போர் தொடர்ந்துவரும் நிலையில், உக்ரைன் தங்களை பாதுகாத்துக்கொள்ள அமெரிக்காவின் பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மிகவும் தேவையான ஒன்று என்று கூறிய ட்ரம்ப், அதனை அந்நாட்டிற்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், எத்தனை என்பதை அவர் கூறவில்லை.

முன்னதாக, உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப் போவதில்லை என்று ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், தற்போது புதின் பேச்சுவார்த்தைக்கு சரிப்பட்டு வரவில்லை என்பதால், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் முன்வந்துள்ளார்.

மேலும், உக்ரைனுக்கு பல்வேறு வகையான ஆயுதங்களை வழங்க உள்ளதாகவும், அதற்காக அவர்கள் முழுமையான அளவில் பணம் செலுத்திவிடுவார்கள் என்றும், இது அமெரிக்காவிற்கு ஒரு வர்த்தகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம், பேட்ரியாட் மற்றும் ஏவுகணைகளை வாங்குவதற்காக, அமெரிக்கா உடன் ஒரு பல கட்ட ஒப்பந்தம் இறுதி செய்யும் தருவாயில் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதின் குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

இதைத் தெடர்ந்து, புதின் குறித்து பேசிய ட்ரம்ப், அவர் உண்மையாகவே ஏராளமான மக்களை ஆச்சர்யத்தி ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார். அவர் நன்றாகவே பேசிவிட்டு, மாலையில் அனைவர் மீதும் குண்டுகளை வீசுகிறார் என விமர்சித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தில், ரஷ்ய அதிபர் புதினுடன் இணைந்து பணியாற்றி, போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை அதிகரிப்பதையும் நிறுத்தி வைத்திருந்தார். ஆனால், பல மாதங்களாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியும், ரஷ்யா எதற்குமே ஒத்துவரவில்லை.

இதனால், சமீப காலமாக, புதின் மீது பெரும் அதிருப்தியில் உள்ளார் ட்ரம்ப். இதனால், அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகளை விதிப்பது குறித்து அவர் தற்போது திட்டமிட்டு வருவதாக தெரிகிறது. அதன் காரணமாகவே, இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக ட்ரம்ப் கூறியுள்ளார். என்ன அறிவிப்பு வரப் போகிறது என்பதை பார்க்கலாம்.