அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கு விதித்துள்ள பரஸ்பர வரிகள், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த முறை காலக்கெடு நீட்டிக்கப்படாது என ஏற்கனவே திட்டவட்டமாக கூறிவிட்டார் ட்ரம்ப். இந்நிலையில், இந்தியாவிற்கு 20 முதல் 25 சதவீத வரி விதிக்கப்படலாம் எனக் கூறி அதிர்ச்சி அளித்துள்ளார் ட்ரம்ப். அவர் என்ன கூறினார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவிற்கு 20 - 25% வரிகள் விதிக்கப்படலாம்“
உலகின் பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த பரஸ்பர வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. இதனால், ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு வரிகள் அமலுக்கு வரும்.
இந்நிலையில், இந்தியாவிற்கான வரிகள் குறித்து பேட்டியளித்த ட்ரம்ப், இந்தியா ஒரு நல்ல நண்பனாக உள்ளதாகவும், ஆனால், கடந்த காலங்களில், எந்தஒரு நாட்டையும் விட, அமெரிக்காவிற்கு இந்தியா தான் அதிக வரிகளை விதித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆனால், தற்போது அவரே பொறுப்பில் உள்ளதால், இனி அதை செய்ய முடியாது என்று கூறியுள்ள ட்ரம்ப், இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிற்கு 20 முதல் 25 சதவீதம் வரையிலான வரிகள் விதிக்கப்படலாம் என்று கூறியுள்ள அவர், ஆனால் சரியான சதவீதம் என்ன என்பது இன்னும் இறுதியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தங்கள் மற்றவர்களுக்கு நல்லதாக இருக்கும், ஆனால் அமெரிக்காவிற்கு மிக மிக நல்லதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
ஆகஸ்ட் 1-லிருந்து அமலுக்கு வரும் வரிகள் என்ன.?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரியை, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு வசதியாக 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார். அந்த கால அவகாசம் கடந்த ஜூலை 9-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி முறையாக எனக் கூறி, இந்த மாத இறுதி வரை அந்த கால அவகாசத்தை நீட்டித்திருந்தார் ட்ரம்ப். இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத அனைத்து நாடுகளிடமிருந்தும் வரி வசூல் தொடங்கும் என அறிவித்திருந்தார்.
இதற்கு மேல் கால நீட்டிப்பு செய்ய மாட்டேன் என கடந்த 9-ம் தேதி எச்சரித்த ட்ரம்ப், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே அறிவித்த நாடுகளுடன் சேர்த்து, கீழ்கண்ட 14 நாடுகளுக்கும் அதிக வரிகளை அவர் விதித்து அறிவித்திருந்தார்.
தென்கொரியா - 25%, ஜப்பான் - 25%, மியான்மர் - 40%, லாவோஸ் - 40%, தென்னாப்ரிக்கா - 30%, கஜகஸ்தான் - 25%, மலேசியா - 25%, துனிசியா - 25%, இந்தோனேசியா - 32%, போஸ்னியா - 30%, வங்கதேசம் - 35%, செர்பியா - 35%, கம்போடியா - 36%, தாய்லாந்து - 36%.
இதில் ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுவிட்ட நிலையில், இதிலுள்ள மற்ற நாடுகளுக்கும், இந்தியா உள்ளிட்ட இன்னும் பல நாடுகளுக்கும் ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து வரி விதிப்பு அமலுக்கு வரும்.