அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி(H-1B) விசாவின் கட்டணத்தை சமீபத்தில் 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்தி அறிவித்தார் ட்ரம்ப். இது இந்தியர்கள் உள்ளிட்ட பல நாட்டு பணியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அந்த கட்டணத்திலிருந்து சிலருக்கு விலக்கு அளித்து ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Continues below advertisement

ஹெச்-1பி விசா கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய ட்ரம்ப்

செப்டம்பர் மாதம் 19-ம் தேதி, அமெரிக்காவில், வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஹெச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக உயர்த்துவதாக ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அதன்படி, ஹெச்-1பி விசாவில் வெளிநாட்டு நபரை பணியமர்த்த சம்பந்தப்பட்ட நிறுவனம் 1 லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. இது, உலகெங்கிலிருந்தும் அமெரிக்காவிற்கு வந்து பணிபுரிவோருக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Continues below advertisement

இந்நிலையில், இந்த அறிவிப்பில் பல குழப்பங்கள் இருந்ததால், விசா கட்டண உயர்வு புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தான் பொருந்தும் என்றும், ஏற்கனவே ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்றும் ட்ரம்ப் நிர்வாகம் விளக்கமளித்தது.

ஹெச்-1பி விசா கட்டணத்திலிருந்து விலக்கு

இந்த சூழலில், தற்போது ஹெச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து சிலருக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக, அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறை அறிவித்துள்ளது.

அதில், எஃப்-1(F-1) மாணவர் விசா அல்லது எல்-1(L-1) தொழில்முறை விசா போன்ற செல்லுபடியாகும் விசாக்களில், அமெரிக்காவில் வசிக்கும் நபர்கள் தங்கள் விசாவை ஹெச்-1பி விசா நிலைக்கு மாற்ற விண்ணப்பிக்கும் போது, உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை என்று அறிவித்துள்ளது.

மேலும், தற்போது ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள், தங்களது நிலையை புதுப்பிக்க அல்லது நீட்டிக்க விண்ணப்பித்தால், பழைய கட்டணத்திலேயே அதை மேற்கொள்ளலாம் என்றும், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறி, மீண்டும் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு தொழிலாளியின் இருப்பு தேசிய நலனுக்காக இருந்தால், அந்த பணியை நிரப்ப எந்த அமெரிக்கரும் கிடைக்கவில்லை என்றால், அந்த நிறுவனத்தின் முதலாளிகள் விதிவிலக்குக்கான கோரிக்கையை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் துறையின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவில் படித்துவரும் சர்வதேச மாணவர்கள் உள்பட, பல்வேறு வகையான விசா வைத்திருப்பவர்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.