Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...

காசா குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம், ட்ரம்ப்பின் பேச்சுக்கு ஹமாசும் எதிர்வினையாற்றியுள்ளது.

Continues below advertisement

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. சொல்லப்போனால், சர்ச்சையான பேச்சுக்களை வைத்தே தான் அவர் உலகப்புகழ் அடைந்தார் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில், தற்போது அவர் காசா குறித்து பேசியுள்ள விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

காசாவை கைப்பற்றுவோம் என கூறி சர்ச்சை

அமெரிக்க அதிபராக பதவியேற்று பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றிவரும் ட்ரம்ப், சமீபத்தில் காசாவை அமெரிக்கா கைப்பற்றப்போவதாக பேசியிருந்தார். இதனால் பெரும் சர்ச்சை வெடித்ததால், அவசர அவசரமாக வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், ட்ரம்ப் காசாவை சொந்தமாக்கும் அர்த்தத்தில் பேசவில்லை, அந்த பகுதியை புனரமைக்க அமெரிக்கா உதவுவதைத்தான் அப்படி கூறிவிட்டார் என ஒரு விளக்கத்தை அளித்தது. இந்த நிலையில், அவர் மீண்டும் காசா குறித்து பேசியிருப்பது, தற்போது பேசுபொருளாகியுள்ளது.

காசா ஒரு அருமையான ரியல் எஸ்டேட் பகுதி - ட்ரம்ப்

அமெரிக்க ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அதிபர் ட்ரம்ப், காசாவை வாங்குவதற்கு தாம் உறுதி பூண்டுள்ளதாகவும், அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு நிற்காமல், அந்த பகுதியை அமெரிக்கா வாங்கிய பிறகு, அதை மாற்றி அமைக்கும் பொறுப்பை மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கு நாங்கள் கொடுக்கலாம் எனவும் கூறியுள்ளார். தாங்கள் அனுமதியுடன் தான் அங்கு யாரும் செயல்பட முடியும் என்றும், ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

காசாவிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் அங்கே திரும்புவதற்கு அங்கு எதுவுமே இல்லை என்றும், அது ஒரு இடிபாடு தளம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். காசா மக்கள் மீண்டும் அங்கே திரும்ப விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்புக்கு ஹமாஸ் அமைப்பு கண்டம்

இதனிடையே, அமெரிக்க அதிபரின் இந்த பேச்சுக்கு, ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசா ஒன்றும் வாங்குவதற்கும், விற்பதற்குமான சொத்து கிடையாது, அது தங்களிடமிருந்து பறிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. காசா அதன் மக்களுக்கு சொந்தமானது என்றும், ஒரு ரியல் எஸ்டேட் அதிபரின் மனநிலையுடன் பாலஸ்தீன பிரச்னையை கையாள்வது தோல்வியையே கொடுக்கும் எனவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும், பாலஸ்தீன மக்கள் அமெரிக்க அதிபரின் இந்த திட்டத்தை முறியடிப்பார்கள் என்றும் ஹமாஸ் அமைப்பினர் கூறியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காசா குறித்த தனது பேச்சுக்களால் ஒவ்வொரு நாளும் பதற்றத்தை அதிகப்படுத்தி வருகிறார். இதனால், அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சம், அப்பகுதியில் அதிகரித்து வருகிறது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola