அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

ஏப்ரல் 25ம் தேதியான சனிக்கிழமை இரவு வாஷிங்டனில் உள்ள ஹில்டன் விருந்தினர் அரங்கில்  இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செய்தியாளர் சந்திப்புக்கு முன் நடைபெற்ற இந்த விருந்தின்போது அனைவரும் அங்கு கீழே அமர்ந்திருக்க, ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா உள்ளிட்ட முக்கியமானவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்க ஒரு கணம் அங்கிருந்த அனைவரும் மிரண்டனர். ஆறு முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாக சொல்லப்படும் நிலையில் உடனடியாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் டொனால்ட் ட்ரம்பை அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் அவரின் மனைவி மெலனியா ட்ரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரும் அழைத்துச் செல்லப்பட்டனர். 

Continues below advertisement

உடனடியாக அந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட நபரை சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே வெள்ளை மாளிகை செய்தியாளர் இரவு விருந்தில் பங்கேற்க சென்ற ANI செய்தியாளர் ரீனா பரத்வாஜ் அங்கு என்ன நடந்தது என்பதை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “சில நிமிடங்களுக்கு முன்பு, வாஷிங்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலின் விருந்தினர் அறையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. நான் முதலில் ஒரு உரத்த சத்தத்தை கேட்டேன். அது தட்டுகள் ஒன்றோடொன்று மோதும் சத்தமாக இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் அடுத்த சில நொடிகளில், உணவு பரிமாறுபவர்கள் தங்கள் தட்டுகளுடன் உள்ளே விரைந்து வந்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவதைக் கண்டேன். அப்போதுதான் ஏதோ சரியில்லை என்று எனக்குத் தோன்றியது.

அந்த அறையில் அமர்ந்திருந்த அனைவரும் மேசைக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். சில நிமிடங்களில் இப்போது எழுந்து செல்வது பாதுகாப்பானது என்று நான் உணர்ந்தபோது, ​​மேடையில் துப்பாக்கிகளுடன் பாதுகாப்பு அதிகாரிகள் நிற்பதை நான் கண்டேன். அமெரிக்க அதிபர்  டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர்.  நிகழ்ச்சி விரைவில் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.   

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்தே அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி பென்சில்வேனியாவில் நடந்த அதிபர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் அவரின் காது பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட 20 வயது நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.