USA Iran WAR: ஹார்மஸ் பகுதியில் நீருக்கடியில் உள்ள கன்னி வெடிகளை அகற்ற பல மாதங்கள் ஆகலாம் என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

நோ சொன்ன ட்ரம்ப்

இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் இதனை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எப்போது நடக்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில், தெஹ்ரான் புதிய அமைதி ஒப்பந்தத்தை சமர்பித்ததாகவும், ஆனால் அது இன்னும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக நிராகரித்துவிட்டேன் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அன்று ஃப்ளோரிடாவில் இருந்து வாஷிங்டன்னிற்கு புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஈரான் கொடுத்த அமைதி ஒப்பந்தம் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என கருதி அதை உடனடியாக ரத்து செய்தேன். அடுத்த பத்தே நிமிடங்களில் மற்றொரு ஒப்பந்தத்தை வழங்கினார்கள். அது ஓரளவிற்கு சிறந்ததாக இருந்தது. அதில் ஏராளமான முன்மொழிவுகள் இருந்தன” என கூறினார்.  மேலும், அதிகப்படியான பயணம் இருந்ததால் ஈரான் உடனான பேச்சுவார்த்தையை நாங்கள் தான் ரத்து செய்தோம் எனவும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்பது மிக முக்கியமான நிபந்தனை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேரடி பேச்சுவார்த்தை என்பதே கிடையாது - ஈரான்

ஈரான் துறைமுகங்களை முடக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பின்வாங்கப்படும் வரை, அவர்களுடன் எந்தவித நேரடி பேச்சுவார்த்தைகளும் கிடையாது என ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் அறிவித்துள்ளார். அவார் பாகிஸ்தான் பிரதமர் உடன் பேசியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலில், “அழுத்தங்கள் மற்றும் மிரட்டல்களுக்கு அடிபணிந்து ஈரான் எந்தவித ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளாது” என தெரிவித்துள்ளாராம். பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படாததை காட்டிலும், அமெரிக்காவில் தற்போது பின்பற்றப்படும் விரோதத்தன்மையே அமைதிக்கு இடையூறாக உள்ளது.

அமெரிக்காவின் விரோத நடவடிக்கைகளும் அழுத்தங்களும் ஓயாத வரை, நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும் பேச்சுவார்த்தைப் பாதையில் முன்னேறுவதும் கடினமாகவே இருக்கும். பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதற்கும், கடற்படை முற்றுகை உள்ளிட்ட தடைகளை முதலில் அகற்ற வேண்டும் என்பதே அமெரிக்காவுக்கான எங்களது பரிந்துரை” என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

பல மாதங்கள் ஆகலாம் என வார்னிங்

இதனிடையே, எண்ணெய் ஏற்றுமதிக்கான முக்கிய கடல்வழிப் பாதையான ஹார்மஸ் ஜலசந்தியில் இருந்து ஈரான் ராணுவம் வைத்த கண்ணிவெடிகளை அமெரிக்க கடற்படை அகற்றி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

பல வாரங்களாக நீடித்து வரும் போரில், அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஒரு நிலையற்ற போர்நிறுத்தம் இருந்தபோதிலும், நீருக்கடியில் உள்ள வெடிபொருட்களை அகற்றும் பணிக்கு பல மாதங்கள் ஆகலாம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். உலகின் 20 சதவீத எண்ணெய் கடந்து செல்லும் இந்த நீர்வழி பாதையானது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரால் மூடப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் எரிபொருட்களின் விலைகள் மற்றும் பரந்த பொருளாதார விளைவுகள் பெரும் அரசியல் அபாயத்தை ஏற்படுத்துவதால், ஜலசந்தி வழியாக மீண்டும் போக்குவரத்தைத் தொடங்குவதற்காக ட்ரம்ப் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட சமீபத்திய நடவடிக்கைகளில் கண்ணிவெடிகளைத் தேடுவதும் ஒன்றாகும்.