Donald Trump: அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக, ஜே.டி. வான்ஸ தேர்வு செய்துள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.


அதிபர் வேட்பாளராக டிரம்ப் அறிவிப்பு:


அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை ஏற்கனவே களைகட்ட தொடங்கியுள்ளது. இந்நிலையில்,  திங்களன்று மில்வாக்கியில் நடைபெற்ற குடியரசு கட்சியின் தேசிய மாநாட்டின் தொடக்கத்தில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ தேர்தல் வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட்டா. தொடர்ந்து தன்னுடன் ஓஹியோ மாகாண செனட்டரான ஜே.டி. வான்ஸ் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்வதாக டிரம்ப் அறிவித்தார்.   


துணை அதிபர் வேட்பாளர் அறிவிப்பு:


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், "துணை அதிபராக, ஜேடி நமது அரசியலமைப்பிற்காக தொடர்ந்து போராடுவார், எங்கள் ஆதரவாளர்களுடன்  நிற்பார், மேலும் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க எனக்கு உதவ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார்" என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமெரிக்க அதிபரான டிரம்பின் மீது பென்சில்வேனியாவில் ஒரு படுகொலை முயற்சி நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, குடியரசு கட்சியின் நான்கு நாள் மாநாடு டவுன்டவுன் மில்வாக்கியின் Fiserv மன்றத்தில் தொடங்கியது.


அதற்கு முன்னதாக ஜேடி வான்ஸ், டக் பர்கம் மற்றும் மார்கோ ரூபியோ போன்றோரை, துணை அதிபர் வேட்பாளருக்காக டிரம்ப் தேர்வு செய்து இருந்தார். தனது விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், வான்ஸ் உள்ளிடோருடன் நேர்காணலை நடத்தினார், அவர்கள் அனைவரும் தங்கள் சுயவிவரங்கள் மற்றும் புகைப்படங்களை மாநாட்டு அமைப்பாளர்களிடம் சமர்ப்பித்து இருந்தனர். நீண்ட ஆலோசனைக்குப் பிறகு வான்ஸ் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அன்று டிரம்பை சாடிய வான்ஸ்:


தெற்கு ஓஹியோவில் பிறந்த ஜே.டி.வான்ஸ் 2016 ஆம் ஆண்டில், டிரம்பை கடுமையாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, டிரம்ப் ஒரு முட்டாள், கண்டிக்கத்தக்கவர் மேலும் அடால்ஃப் ஹிட்லருக்கு நிகரானவர் என்றெல்லாம் வான்ஸ் பேசியுள்ளார். ஆனால் அவர் தனது கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டதுடன்,  2020 ஜனாதிபதித் தேர்தல் மோசடிகளால் சிதைக்கப்பட்டதாக தான் தவறாக பேசியதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். குடியரசுக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சியினரும் வான்ஸ் ஒரு சந்தர்ப்பவாதி என்று கூறி வந்தனர். இருப்பினும்,  டிரம்ப் மற்றும் அவரது ஆலோசகர்கள் பலர் வான்ஸின் மாற்றத்தை உண்மையானதாகக் கருதி, அவரை துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளனர்..


பைடனுக்கு எதிராக போட்டியிடும் டிரம்ப்:


மாநாட்டின் நிறைவு நாளான வியாழனன்று தனது உரையின் போது, கட்சியின் வேட்புமனுவை டிரம்ப் ஏற்றுக்கொள்வார் என கூறப்படுகிறது. இதன் மூலம், ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், தற்போதைய அதிபருமான பைடனை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.