Trump Tariff: வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களால், ஹாலிவுட் திரையுலகம் ஆபத்தில் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

”சினிமாவிற்கு 100 சதவிகிதம் வரி”

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதில் இருந்தே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல தடாலடிடியான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக வரி விதிப்பு தொடர்பான அவரது முடிவுகள், வர்த்தக போர் சூழலை ஏற்படுத்தியுள்ளது. அந்த வரிசையில், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு அமெரிக்காவில் 100 சதவிகிதம் வரி விதிக்கப்படும் எனவும், ஹாலிவுட் மிக வேகமாக இறந்து வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சினிமாவிற்கு ஆப்படித்த ட்ரம்ப்:

ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளபதிவில், “ அமெரிக்க தயாரிப்பு நிறுவனங்களை தங்கள் பக்கம் ஈர்க்க வெளிநாடுகள் ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகின்றன. இதனால் ஹாலிவுட் மற்றும் பல அமெரிக்க பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளின் இந்த ஒருங்கிணைந்த முயற்சியானது, நாட்டின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாகும். அதன் காரணமாக, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு நமது நாட்டிற்கு வரும் படங்கள் மீது 100 சதவிகிதம் வரி விதிப்பதற்கானநடவடிக்கைகளை தொடருமாறு வணிக துறைக்கு உத்தரவிடுகிறேன். அமெரிக்காவிலேயே படங்களை தயாரிக்கும் முறை மீண்டும் நமக்கு வேண்டும்” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவினை குறிப்பிட்டு, “அந்த பணியில் தாங்கள் இருப்பதாக” அமெரிக்க வணிக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது வெளிநாடுகளில் திரைப்படங்களை தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை பாதிக்குமா? அல்லது உள்நாட்டு நிறுவனங்களை பாதிக்குமா? என்பது குறித்த எந்த விளக்கமும் இல்லை.

சீனாவிற்கான எதிர்வினையா?

வர்த்தக மோதல் காரணமாக, அமெரிக்க படங்களை திரையிடுவதை குறைக்க திட்டமிட்டுள்ளதாக, சீனா அறிவித்த ஒரு மாத காலத்தில், இந்த வரி அறிவிப்பை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். சீனா உலகின் மிகப்பெரிய சினிமா சந்தையாகும். அந்நாட்டு பொருட்கள் மீதான வரியை அமெரிக்கா 125 சதவிகிதமாக உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு கட்ட அழுத்தங்களுக்குப் பிறகு சீனாவை தவிர, பல்வேறு நாடுகள் மீது விதிக்கப்பட்ட வரியை வரும் ஜுலை மாதம் வரை ட்ரம்ப் நிறுத்தி வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

கலக்கத்தில் தயாரிப்பு நிறுவனங்கள்:

அமெரிக்காவின் திரைப்படத்துறையை மீட்டெடுக்க இந்த நடவடிக்கை என ட்ரம்ப் கூறினாலும், இது ஹாலிவுட்டிற்கே பெரும் பிரச்னையாக மாறலாம் என கூறப்படுகிறது. பெரும் திரைப்பட நிறுவனங்களான டிஸ்னி, பாரமவுண்ட் மற்றும் வார்னர் ப்ரோஸ் போன்றவை, தற்போது தான் மெல்ல மெல்ல கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வருகின்றன. மேலும், வெளிநாடுகளில் கிடைக்கும் பல்வேறு சலுகைகளால் அங்கு சென்று படப்பிடிப்புகளையும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100 சதவிகிதம் வரி விதித்து இருப்பது, தயாரிப்பு நிறுவனங்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

உச்சத்தில் டிக்கெட் விலை?

தற்போதைய சூழலில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மார்வெலின் அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே, கிறிஸ்டோபர் நோலனின் தி ஒடிசி, ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 4 மற்றும் டிசியின் சூப்பர் கேர்ள் ஆகிய திரைப்படங்களுக்கு வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இந்த படங்களின் மீது 100 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டால், அதன் டிக்கெட் விலை கடுமையாக உயரக்கூடும்.

இந்தியாவிற்கு ஆபத்தா?

இதனிடையே, ட்ரம்ப் பொருட்கள் மீது மட்டுமே இதுநாள் வரை வரிகளை விதித்து வந்தார். ஆனால், திரைப்படங்களுக்கும் வரி விதித்து முதல்முறையாக சேவை பிரிவிலும் தனது அதிரடியை தொடங்கியுள்ளார். இந்த வரியானது அமெரிக்காவில் திரையிடப்படும் இந்தியா போன்ற பிறநாட்டு படங்களுக்கும் பொருந்துமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.