Continues below advertisement

வட அமெரிக்க நாடான கனடா, அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கைகளால் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஒரு விளம்பரத்தை ஒளிபரப்பியது. இதனால் கோபமடைந்த ட்ரம்ப், அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். நடந்தது என்ன.? அந்த விளம்பரத்தில் என்ன உள்ளது.? பார்க்கலாம்.

கனடாவிற்கு விளம்பரத்தால் வந்த வினை

வட அமெரிக்க நாடான கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகமான வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இதைத் தொடர்ந்து, கனடாவின் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றான ஒன்டோரியோ மாகாணம், அமெரிக்காவின் புதிய வரி கொள்கைகளால்  கனடாவிற்கு ஏற்படும் பாதிப்புகளை அமெரிக்க மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக, தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.

Continues below advertisement

ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த விளம்பரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகன், 1987-ம் ஆண்டு அந்நாட்டு தேசிய வானொலியில் பேசிய உரைகளிலிலிருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதையடுத்து, இதற்கு ரொனால்ட் ரீகன் அறக்கட்டளை எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

இந்நிலையில், இந்த விளம்பரத்தால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கனடாவுடன் நடத்தி வந்த வர்த்தகப் பேச்சுகள் அனைத்தும் முடிவுக்கு வருவதாக தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நாளை முதல் நிறுத்தப் போவதாக ஒன்டோரியோ மாகாண முதல்வர் டக் போர்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், கனடா, ரொனால்ட் ரீகனின் வரிகள் குறித்த உரையில் மோசடியான விளம்பரத்தை வெளியிட்டு கையும் களவுமாக பிடிபட்டது என குறிப்பிட்டுள்ளார். மேலும், ரீகன் அறக்கட்டளை, "ஜனாதிபதி ரொனால்ட் ரீகனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோவைப் பயன்படுத்தி ஒரு விளம்பர பிரசாரத்தை உருவாக்கியது. அந்த விளம்பரம் அதிபரின் வானொலி உரையை தவறாக சித்தரிக்கிறது" என்றும், "அந்தக் கருத்துக்களைப் பயன்படுத்தவும், திருத்தவும் அனுமதி பெறவில்லை என்றும் கூறியது. ரொனால்ட் ரீகன் ஜனாதிபதி அறக்கட்டளை மற்றும் நிறுவனம் இந்த விஷயத்தில் அதன் சட்டப்பூர்வ விருப்பங்களை மறுபரிசீலனை செய்து வருகிறது." என கூறியுள்ளார்.

அதோடு, இந்த மோசடியின் ஒரே நோக்கம், அமெரிக்காவை காயப்படுத்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் வரிகளில் அமெரிக்க உச்சநீதிமன்றம் தங்களை "மீட்பதற்கு" வரும் என்ற கனடாவின் நம்பிக்கையாகும். இப்போது அமெரிக்கா அதிக மற்றும் மிதமிஞ்சிய கனேடிய வரிகளுக்கு எதிராக (மற்றும் உலகின் பிற பகுதிகளிலிருந்தும்!) தன்னைத் தற்காத்துக் கொள்ள முடிகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நோக்கங்களுக்காக வரிகளை ரொனால்ட் ரீகன் விரும்பினார். ஆனால் கனடா அதை விரும்பவில்லை என்று கூறியது! அவர்களின் விளம்பரம் உடனடியாக அகற்றப்பட இருந்தது, ஆனால் அது ஒரு மோசடி என்பதை அறிந்து நேற்று இரவு உலகத் தொடரின் போது அதை இயக்க அனுமதித்தனர். உண்மைகளை அவர்கள் கடுமையாக தவறாக சித்தரித்ததாலும், விரோதமான செயலாலும், கனடா மீதான வரியை அவர்கள் இப்போது செலுத்துவதை விட 10% அதிகமாக உயர்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

கனடா உடன் அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் முடித்து கொண்ட சில நாட்களில் அதிபர் ட்ரம்ப் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.