அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல்வேறு நாடுகளுக்கான பரஸ்பர வரி விதிப்பிற்கான காலக்கெடுவை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ள நிலையில், இதுவரை ஓரிரு நாடுகள் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த நிலையில், இந்தியா உடனான ஒப்பந்தம் இழுபறியில் இருந்த நிலையில், தற்போது அது குறித்து சாதகமான விஷயம் ஒன்றை கூறியுள்ளார் ட்ரம்ப். ஆனால் இந்தியா அதை ஏற்குமா என்பதுதான் தற்போதைய கேள்வி.
இழுபறியில் இருக்கும் இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பாக பல்வேறு நாடுகளும் தீவிர பேச்சுவார்த்தை நடத்திவரும் நிலையில், இந்திய அதிகாரிகள் குழுவும் வாஷிங்டனில் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை நடத்தின. கிட்டத்தட் வர்த்தக ஒப்பந்தம் முடிந்துவிட்டது என கடந்த மாதமே கூறப்பட்ட நிலையில், ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை.
தற்போது வரி விதிப்பிற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 1-ம் தேதி வரை ட்ரம்ப் நீட்டித்துள்ள நிலையில், அதற்குள்ளாகவாவது, இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படுமா என்ற கேள்விகள் இருந்து வருகின்றன.
அமெரிக்கா-இந்தோனேசியா இடையே இறுதியான வர்த்தக ஒப்பந்தம்
இந்த சூழலில், அமெரிக்கா - இந்தோனேசியா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தோனேசியா உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அது குறித்து அந்நாட்டு அதிபருடன் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னாள் இந்தோனேசிய சந்தையை தாங்கள் அணுக முடியாத சூழல் இருந்ததாகவும், பல கட்டுப்பாடுகள் இருந்ததாகவும் கூறியுள்ள ட்ரம்ப், தற்போது அவை நீக்கப்பட்டுள்ளது தான் தற்போதைய ஒப்பந்தத்தில் மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தத்தின்படி, அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு இந்தோனேசியா எந்த வரியும் விதிக்காது என்றும், இந்தோனேசிய ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 19 சதவீத வரி விதிக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவிற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட கூடுதல் வரி தற்போது 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா ஆசிய நாட்டின் சந்தைகளுக்கு முழு அணுகலை பெற உள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் - இந்தியாவிற்கு நல்ல செய்தி சொன்ன ட்ரம்ப்
தொடர்ந்து, இந்தியா உடனான ஒப்பந்தம் குறித்து தெரிவித்துள்ள ட்ரம்ப், இந்தோனேசியாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அதே வழியில், இந்தியா உடனான ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவை அணுகப் போகிறோம் என்றும், இந்த நாடுகளில் எதற்கும் தங்களுக்கு அணுகல் இல்லாமல் இருந்ததாகவும், தங்கள் மக்களால் உள்ளே சென்று வர்த்தகம் செய்ய முடியவில்லை என்றும் ட்ரம்ப் கூறினார். தற்போது ஒப்பந்தங்கள் காரணமாக அணுகலை பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா ஒப்புக்கொள்ளுமா.?
ஏற்கனவே இந்திய அதிகாரிகள் குழு அமெரிக்காவில் தங்கி வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக கடந்த மாதம் முதல் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தங்கள் மீதான வரிகளை முழுமையாக நீக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இது குறித்து சமீபத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இரு தரப்பிற்கும் பயனளிக்கும் வகையில் இருந்தால் மட்டுமே வர்த்தக ஒப்பந்தம் ஏற்கப்படும் என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், இந்தோனேசியா போன்றே ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால், இந்தியா அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்காமல் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா அப்படி செய்யுமா என்பது சந்தேகம் தான். இந்தோனேசியா ஆனால், விரைவில் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படும் என்று ட்ரம்ப் கூறியுள்ளதால், இந்தோனேசியா போன்று அல்லாமல், வேறு விதமாக ஏதேனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.