Trump In UN: ஐக்கிய நாடுகள் சபையில் தான் எதிர்கொண்ட சிக்கல்கள் தொடர்பாக, ரகசிய அமைப்பு விசாரணை நடத்த வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஐநாவில் எனக்கு எதிராக சதி...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், மூன்று மிகவும் மோசமான நிகழ்வுகளால் தான் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தனக்கு நேர்ந்தவை தற்செயலான சம்பவங்கள் அல்ல என்றும், ரகசிய சேவை அமைப்பு விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தனது உரையில் ஐ.நா.வை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், அந்த அமைப்பு அதன் திறனை வீணடிப்பதாகக் குற்றம் சாட்டினார். உக்ரைன் போரை கையாண்ட விதம் மற்றும் குடியேற்றத்திற்கான அவர்களின் அணுகுமுறை குறித்து ஐரோப்பிய நட்பு நாடுகளைக் கண்டித்தார், சில நாடுகள் நரகத்திற்குச் செல்கின்றன என்றும் எச்சரித்தார்.
எஸ்கலேட்டர் ஃபெயிலு..
ட்ரம்ப் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் "ஐக்கிய நாடுகள் சபையில் நேற்று ஒரு உண்மையான அவமானம் நடந்தது. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று மிக மோசமான நிகழ்வுகள். முதலில், நிகழ்ச்சி நடைபெறும் பிரதான மாடிக்குச் செல்லும் எஸ்கலேட்டர் ஒரு பயங்கரமான சத்தத்துடன் நின்றது. மெலனியாவும் நானும் அந்த இரும்பு படிகளின் கூர்மையான விளிம்புகளில், நல்வாய்பாக விழவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. நாங்கள் ஒவ்வொருவரும் கைப்பிடியை இறுக்கமாகப் பிடித்திருந்தோம், இல்லையெனில் அது ஒரு பேரழிவாக இருந்திருக்கும். இது முற்றிலும் நாசவேலை... இதைச் செய்தவர்களைக் கைது செய்ய வேண்டும்.
டெலிப்ராம்ப்டர் ஓடல...
இரண்டாவது பிரச்சனை, தனது உரையின் போது டெலிப்ராம்ப்டர் வேலை செய்யவில்லை. முதலில் எஸ்கலேட்டர் நிகழ்வு, இப்போது ஒரு மோசமான டெலிப்ராம்ப்டர். இது எப்படிப்பட்ட இடம்? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. பின்னர் டெலிப்ராம்ப்டர் இல்லாமல் உரையை தொடங்கினேன். அது சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு தொடங்கியது. நல்ல செய்தி என்னவென்றால், பேச்சு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சவுண்ட் கேட்கல...
இறுதியாக, "எனது உரையின்போது அரங்கில் ஒலி முற்றிலுமாக அணைந்துவிட்டதாகவும், உலகத் தலைவர்கள், மொழிபெயர்ப்பு கருவிக்ளை பயன்படுத்தாவிட்டால், எதையும் கேட்க முடியாது என்றும் எனக்குச் சொல்லப்பட்டது. உரையின் முடிவில் நான் முதலில் பார்த்த நபர் மெலனியா, அவர் முன்னால் அமர்ந்திருந்தார். நான், 'நான் எப்படிச் செய்தேன்?' என்று கேட்டேன். அவள், 'நீங்கள் சொன்ன ஒரு வார்த்தையையும் என்னால் கேட்க முடியவில்லை' என்றாள். இது தற்செயல் நிகழ்வு அல்ல, இது ஐ.நா.வில் நடந்த மூன்று நாசவேலை. அவர்கள் தங்களைப் பற்றி வெட்கப்பட வேண்டும். இந்தக் கடிதத்தின் நகலை நான் பொதுச் செயலாளருக்கு அனுப்புகிறேன், உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று நான் கோருகிறேன்" என ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஐ.நா., சொல்வது என்ன?
அமெரிக்க குழுவைச் சேர்ந்த வீடியோகிராஃபர் தற்செயலாக எமர்ஜென்சி மெகானிசமை அழுத்தியதால் எஸ்கலேட்டர் நின்றிருக்கலாம் என்று ஐ.நா அதிகாரிகள் தெரிவித்தனர். டெலிப்ராம்ப்டர் ஐக்கிய நாடுகள் சபையால் அல்ல வெள்ளை மாளிகையால் தான் இயக்கப்படுகிறது என்றும், பொதுச்சபை அரங்கில் ஆடியோ சிக்கல்கள் ஏற்படுவது அசாதாரணமானது அல்ல என்றும் ஐக்கிய நாடுகள் சபையால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளரான அமெரிக்கா உட்பட உறுப்பு நாடுகளிடமிருந்து தாமதமான பணம் செலுத்தல் காரணமாக, ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, எஸ்கலேட்டர் மற்றும் லிஃப்ட்கள் அவ்வப்போது அணைத்து வைப்பது வாடிக்கை என்றும் கூறப்படுகிறது.