இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் உட்பட உலகளாவிய மோதல்களைத் தீர்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பெருமை பேசியுள்ளார். தனது ஆசிய பயணத்திற்கு முன்னதாக ஏர்ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவது ரஷ்யா மற்றும் உக்ரைனை விட கடினமானதாக இருக்கும் என்று தான் நினைத்ததாகக் கூறினார். மேலும், இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை முற்றிலும் நிறுத்துவதாக உறுதியளித்திருப்பதாக மீண்டும் தெரிவித்துள்ளார். அவர் பேசியது குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தியா-பாக். போர் நிறுத்தம் குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவதை விட கடினமாக இருக்கும் என தான் நினைத்த பல போர்களை ஏற்கனவே நிறுத்திவிட்டதாக கூறினார். அதில் இந்தியா-பாகிஸ்தான் போர் போல பலவற்றை கூற முடியும் என தெரிவித்த அவர், தான் நினைத்ததைவிட ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது கடினமாக உள்ளதாகவும், சவாலானதாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
வாஷிங்டனின் மத்தியஸ்தத்தால் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளான இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் "முழுமையான மற்றும் உடனடி" போர்நிறுத்தத்தைப் பெற உதவியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். இந்த மாத தொடக்கத்தில், அவர் தனது வரி அச்சுறுத்தல்களை உண்மையான சமாதானம் செய்பவர் என்று கூறி,யதுடன், அவ்வாறு கூறவில்லையென்றால் 8 உலகளாவிய மோதல்களை "தீர்க்க" முடியாது என்றும் கூறினார்.
ட்ரம்ப்பின் கூற்றை மறுத்துவரும் இந்தியா
ட்ரம்ப் இவ்வாறு கூறிவரும் நிலையில், இந்தியா பலமுறை அவரது கூற்றை நிராகரித்து, மறுப்பு தெரிவித்து வருகிறது. எந்த ஒரு மூன்றாம் தரப்பு மத்தியஸ்தமும் இல்லாமல், நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் போர் நிறுத்த முடிவு எட்டப்பட்டது என்று இந்தியா திட்டவட்டமாக கூறி வருகிறது.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தை மீண்டும் கூறிய ட்ரம்ப்
இதேபோல், இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிடும் என்ற தனது கூற்றையும் டிரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
ரஷ்ய எண்ணெய்யை இறக்குமதி செய்வது குறித்து பேசிய அவர், "இந்தியா முற்றிலுமாக குறைத்துக் கொண்டிருக்கிறது. சீனா ரஷ்ய எண்ணெய் வாங்குவது பற்றி நான் ஷி ஜின்பிங்குடன் விவாதிக்கலாம்" என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
மேலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழியை அவர் முன்னர் மேற்கோள் காட்டினார். "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் கொள்முதல் இருக்காது என்று அவர்(மோடி) எனக்கு உறுதியளித்துள்ளார். அவரால் அதை உடனடியாகச் செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்" என்று அவர் கூறியிருந்தார்.
எண்ணெய் இறக்குமதி தொடர்பாக எந்த ஒரு ஒப்பந்தத்தையும் இந்தியா மறுத்துள்ளது. நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்தியா தெளிவாக கூறியுள்ளது.
யார் சொல்வது பொய்.?
இந்நிலையில், ட்ரம்ப் தற்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியது, ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்காது என மோடி உறுதியளித்திருப்பதாக கூறியது என இந்த இரண்டு விஷயங்களையும் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். ஆனால், இந்தியா அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்த சூழலில், யார் சொல்வது பொய் என்று மக்கள் குழம்பிப் போய் உள்ளனர். இரு தரப்புமே மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக கூறி வருவது, பொதுமக்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.